75-ம் ஆண்டு சுதந்திர தின ஆண்டில் இங்கிலாந்தை முந்தியது இந்தியா


75-ம் ஆண்டு சுதந்திர தின ஆண்டில் இங்கிலாந்தை முந்தியது இந்தியா
x

கனரக தொழில்கள் மட்டுமல்லாமல், குறு, சிறு, நடுத்தர தொழில்களும் பெருகவேண்டும், விவசாயம் இன்னும் தழைத்தோங்கவேண்டும், அதற்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுக்கவேண்டும்.

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கி இருக்கவேண்டும் என்றால், அங்கு உற்பத்தி மேலோங்கி இருக்கவேண்டும், வர்த்தகம் தழைக்கவேண்டும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும், வரி வருவாய் அதிகமாக இருக்கவேண்டும், ஏற்றுமதி பெருகவேண்டும், தனிநபர் வருவாய் அதிகரிக்கவேண்டும், விவசாயம் செழிக்கவேண்டும், விலைவாசி குறையவேண்டும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என, இப்படி பல உயர்வுகள் இருக்கவேண்டும்.

பொதுவாக சரக்கு சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகமாக இருந்தால், உற்பத்தி அதிகம், விற்பனை அதிகம், சேவை தொழில் உயர்வு, தனிநபர் வாங்கும் சக்தி அதிகம் என்பதற்கான காரணிகளாக கருதப்படும். அந்த வகையில், கடந்த 7 மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. இவ்வளவு ஜி.எஸ்.டி. வரி வசூல் என்றால், அது எல்லா தொழிலும் வளர்கிறது, பொருளாதார வளர்ச்சி தழைக்கிறது என்பதற்கு அடையாளமாகும். இது இப்போது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) உயர்ந்துவிட்டதற்கு சான்றாகும்.

இங்கிலாந்து நாட்டின் ஆளுமையில் 200 ஆண்டுகளுக்கு மேல் இருந்த இந்தியா, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாக அமிர்த பெருவிழாவை நாடு கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டை நினைவுபடுத்தும் வகையில், பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் இருந்து வாங்கிய பழைய போர் கப்பலுக்கு பதிலாக, "மேக் இன் இந்தியா", அதாவது "இந்தியாவில் தயாரித்தது" என்ற அடிப்படையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலை கொச்சியில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 17 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட இந்த பிரமாண்ட கப்பலை நிறுத்தும் வசதி மும்பையில்கூட இல்லை. சென்னையிலுள்ள காட்டுப்பள்ளி எல் ஆண்டு டி துறைமுகத்தில்தான் இருக்கிறது. அடுத்த 8 ஆண்டுகள் இந்த கப்பல் சென்னையில்தான் நிறுத்தப்பட்டிருக்கும் என்ற பெருமை தமிழ்நாட்டுக்கு இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், எந்த இங்கிலாந்திடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததோ, அந்த இங்கிலாந்தை பொருளாதாரத்தில் முந்தி உலகில் 5-வது இடத்துக்கு இந்தியா வந்துவிட்டது. இதுவரை உலகில் பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில், அதாவது 6-வது இடத்தில் இந்தியா இருந்தது. இப்போது இங்கிலாந்தைவிட பொருளாதாரத்தில் முன்னேறி இந்தியா 5-வது இடத்துக்கு வந்துவிட்டது என்று சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தரவுகளின் அடிப்படையில் "புளும் பெர்க்" ஊடக நிறுவனம் கணித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. சர்வதேச தரவுகளின் அடிப்படையில் 2022-ல் இந்தியாவின் ஜி.டி.பி. 3.5 லட்சம் கோடி அமெரிக்க டாலராகவும், இங்கிலாந்தின் ஜி.டி.பி. 3.4 லட்சம் கோடி அமெரிக்க டாலராகவும் உள்ளது. 2027-ல் இந்தியா இன்னும் வேகமடைந்து 4-வது இடத்துக்கு வந்துவிடும் என்றும், இங்கிலாந்து 6-வது இடத்துக்கு போய்விடும் என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

இதுமட்டுமல்ல, 2029-ல் ஜெர்மனி, ஜப்பானை முந்தி 3-வது இடத்துக்கு, அதாவது அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்துக்கு இந்தியா வந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கும், ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. ஆனால், தனிநபர் வருமானத்தில் இங்கிலாந்தைவிட இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. இதற்கு காரணம், இந்தியாவின் மக்கள்தொகை இங்கிலாந்தைவிட பல மடங்கு அதிகம் என்பதுதான் யதார்த்த நிலையாகும். கொரோனாவுக்கு பிறகு இந்தியா அனைத்து துறைகளிலும், குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் பீடுநடைபோட்டு வருகிறது. ஆனால், ஏற்றுமதி இன்னும் பெருகவேண்டும். அதற்கு கனரக தொழில்கள் மட்டுமல்லாமல், குறு, சிறு, நடுத்தர தொழில்களும் பெருகவேண்டும், விவசாயம் இன்னும் தழைத்தோங்கவேண்டும், அதற்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுக்கவேண்டும்.


Next Story