சீனாவை முந்தப்போகிறது இந்தியா!


சீனாவை முந்தப்போகிறது இந்தியா!
x

சீனாவைவிட இந்தியா எவ்வளவோ விஷயங்களில் முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறது. பொருளாதாரத்தில், வர்த்தகத்தில், உற்பத்தியில் என்று ஒரு பெரிய பட்டியலே நீண்டு கொண்டு போகிறது.

சீனாவைவிட இந்தியா எவ்வளவோ விஷயங்களில் முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறது. பொருளாதாரத்தில், வர்த்தகத்தில், உற்பத்தியில் என்று ஒரு பெரிய பட்டியலே நீண்டு கொண்டு போகிறது. ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு, மக்கள்தொகையில் சீனாவை அடுத்த ஆண்டு இந்தியா முந்தப்போகிறது என்ற புதிய தகவலை ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது.

"உலக மக்கள்தொகை விளைவுகள்-2022" என்ற அறிக்கையை ஐக்கிய நாட்டு சபையின் பொருளாதார மற்றும் சமூகவிவகாரத்துறை இப்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி உலகின் மக்கள்தொகை 800 கோடியை எட்டிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய நாட்டு சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், உலக மக்கள்தொகை தினமான கடந்த 11-ந்தேதி உலகின் 800 கோடியாவது குழந்தை பிறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். 2030-ல் இது 850 கோடியாகப்போகிறது. 2050-ல் உலகின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகள்தான் காரணமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ல் நடந்தது. அப்போது மக்கள்தொகை 121 கோடியாகும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். கொரோனா காரணமாக 2021-ல் அது நடைபெறவில்லை. இருந்தாலும், ஐ.நா.கணக்கெடுப்புப்படி 2022-ல் இந்தியாவின் மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சம் என்றும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, இரு நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்தை கணக்கிட்டு பார்த்தால், அடுத்த ஆண்டே மக்கள்தொகையில் சீனாவை இந்தியா முந்தி, உலகிலேயே அதிக மக்கள்தொகையுள்ள நாடு என்ற பெயரைப் பெற்றுவிடும் என்று தெரிவித்துள்ளது.

இறப்பு விகிதம் குறைந்து, மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். இதுமட்டுமல்லாமல், பிரசவத்தில் இறப்பு விகிதம் குறைவு, நோய்வாய்படும் நேரத்தில் மருத்துவத்தில் நல்ல வசதி, நோய் வராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கையும் இறப்பு விகிதத்தை குறைத்து, மக்கள்தொகையை அதிகரித்து இருக்கிறது.

2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியே 80 லட்சமாகவும், சீனாவின் மக்கள்தொகை 131 கோடியே 70 லட்சமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் சீனா இந்தியாவைவிட 3 மடங்கு பெரிய நாடு. இதேபோல 3 மடங்கு பெரிய நாடான அமெரிக்காவின் மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா?, 33 கோடியே 24 லட்சம்தான்.

தமிழ்நாட்டின் மக்கள்தொகை இப்போது 7 கோடியே 21 லட்சத்துக்கு மேல் இருக்கும். தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.33 சதவீதமாகும். மக்கள்தொகை உயர்ந்தால், மத்திய, மாநில அரசுகளுக்கு இனி நிறைய பொறுப்பு இருக்கும். பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, உற்பத்தி, விவசாய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சாலை, குடிநீர், கழிவுநீர், மின்சாரம், உணவு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளை அளிக்க அரசுக்கும் அதிக செலவு ஏற்படும். அதற்குரிய திட்டங்களையும் நிறைவேற்றவேண்டும். கூடுதல் செலவுகளை சமாளிக்க, கூடுதலாக நிதி திரட்ட வேண்டியது இருக்கும். மக்கள்தொகை உயர்வால் உற்பத்தியை, விவசாயத்தை பெருக்க மனித உழைப்புக்கு அதிகம் பேர் கிடைப்பார்கள். இதனால் உற்பத்தி பெருகவும், வருமானம் அதிகரிக்கவும் நிச்சயம் வாய்ப்பு இருக்கும். மறுபக்கம் அளவுக்கு மிஞ்சினால் கஷ்டம் என்ற வகையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக்கட்டுப்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அந்த விழிப்புணர்வும் ஏழை-எளிய, படிக்காத, பாமர மக்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் எழுத்தறிவு விகிதம் அதிகமாக இருக்கிறது என்ற வகையிலும், தமிழக மக்களும் குறைவான மக்கள்-நிறைவான வசதி என்பதை புரிந்தவர்கள் என்றவகையிலும், தமிழக அரசு மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னும் சிறப்பு கவனம் செலுத்தி, இந்தியாவுக்கே, ஏன் உலகுக்கே முன்னோடியாக இருக்கவேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story