தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்


தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்
x

தமிழகத்துக்கு பல பெருமைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. இன்றும் இருக்கிறது. அதில் கூடுதல் பெருமையாக, புகழ் சேர்க்கும் பெருமையாக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வரப்போகிறது.

தமிழகத்துக்கு பல பெருமைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. இன்றும் இருக்கிறது. அதில் கூடுதல் பெருமையாக, புகழ் சேர்க்கும் பெருமையாக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வரப்போகிறது. தற்போது ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் இருக்கிறது. அங்கு 2 ராக்கெட் ஏவுதளங்கள் இருக்கின்றன. இங்கிருந்து 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரியப்பட்டா ராக்கெட் மூலம் பூமி அறிவியல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அன்று முதல் இதுவரை 36 நாடுகளுக்கு சொந்தமான 381 செயற்கைகோள்கள் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

கடந்த 23-ந்தேதி இங்கிலாந்து நாட்டின் 36 செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்.-3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. வணிகப்பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டமென்பது இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கும், இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டது. இவ்வளவு ஆற்றல் மிகுந்த ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் தமிழ்நாட்டில் தொடங்கப்படவேண்டியது.

இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் 1960-ம் ஆண்டுகளில் இந்த ஏவுதளத்தை இந்தியாவில் அமைக்க ஒரு பொருத்தமான இடத்தை கண்டறிய மூத்த விஞ்ஞானி ஆர்.எம்.வாசகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தார். கிழக்கு கடற்கரையோரம் அமைத்தால் ராக்கெட்டுகள் குடியிருப்புகளுக்கு மேல் பறக்காமல் வங்காளவிரிகுடா மீது பறக்கும் என்பதால், அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய அனுப்பினார். அந்தக்குழுவும் பல இடங்களை பார்த்தது. அதில் நாகப்பட்டினம் அருகேயுள்ள இடமும், ஸ்ரீஹரிகோட்டாவும் மற்றும் சில இடங்களையும் கண்டறிந்தது. முதல் தேர்வான நாகப்பட்டினம் குறித்து முடிவு செய்ய விக்ரம் சாராபாயும், அவரது குழுவும் அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த அண்ணாவை சந்திக்க முயற்சி செய்தனர். அப்போது உடல்நலக்குறைவாக இருந்த அண்ணாவால் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு அமைச்சரை சந்தித்தனர். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் ஆந்திரா இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது. 2,600 ஏக்கர் நிலத்தை கொடுத்து இந்த விண்வெளி மையத்தை ஆந்திரா கொண்டு சென்றுவிட்டது.

அன்று பறிபோன வாய்ப்பு இப்போது மீண்டும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்துக்கு கிடைத்துள்ளது. இங்கு 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. இதற்கான நிலம் கையெடுப்பு பணிகள் முடிந்து சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. நிலவியல் ரீதியாக ஸ்ரீஹரிகோட்டாவைவிட பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள குலசேகரப்பட்டினம் பல சாதகங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் செயற்கைகோள்கள் முதலில் கிழக்கு நோக்கி ஏவப்படுகிறது. பின்பு அவை தெற்கு நோக்கி திரும்புகின்றன. இதனால் எரிபொருள் அதிகமாக செலவாகும். ஆனால், குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டால் நேர்க்கோட்டில் தெற்கு நோக்கி ஏவமுடியும். மேலும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் புயல் தாக்கும் வாய்ப்பு இருப்பதால், அந்த நேரங்களில் செயற்கைகோள்களை ஏவமுடியாது. ஆனால், குலசேகரப்பட்டினத்தில் அந்த சூழ்நிலை ஏற்படாது. எல்லாவற்றுக்கும் மேலாக குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுக்கும் வருவாய் பெருகும். குலசேகரப்பட்டினம் போல நாகப்பட்டினம் பகுதியிலும் ஒரு ஏவுதளம் அமைக்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்.


Next Story