கொரோனா காலத்தில் கற்றல் இழப்பு!


கொரோனா காலத்தில் கற்றல் இழப்பு!
x

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகையே கசக்கிப் பிழிந்த கொரோனா, மாணவர்களின் படிப்பையும் விட்டுவைக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகையே கசக்கிப் பிழிந்த கொரோனா, மாணவர்களின் படிப்பையும் விட்டுவைக்கவில்லை. இந்த 2 ஆண்டுகளிலும் தேர்வுகள் நடக்காமல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், வீட்டிலிருந்தே ஆன்லைனில் படித்தது, மாணவர்களுக்கு பெரும் கற்றல் இழப்பை ஏற்படுத்தியது.

கொரோனாவுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடக்கவில்லை. ஜூன் மாதம் அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நேரத்தில், வகுப்புகள் 'ஆன்லைன்' மூலமாகவே நடந்தது. அதன்பிறகு, நவம்பர் 16-ந்தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, சிறிது நாட்களில் நோய்த்தொற்று அதிகரித்ததன் காரணமாக மீண்டும் மூடப்பட்டன. 'ஆன்லைன்' மூலமே வகுப்புகள் நடந்தன.

2021-ம் ஆண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும், தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அந்த ஆண்டு மாணவர்களின் தரம், கற்றல் திறனை ஆய்வுசெய்ய முடியாமல் போய்விட்டது. பின்னர், 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. ஆன்லைனில்தான் வகுப்புகள் நடந்தன. அதற்கு முன்பு இருந்ததுபோல, செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து, 9 முதல் 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டு, டிசம்பர் 2-வது வாரத்தில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டன. 2022-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதிதான் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் இறுதித்தேர்வும் நடந்தது.

இந்தநிலையில், கொரோனா நேரத்தில் இந்தியா முழுவதும் மாணவர்களின் கற்றல் திறன் எப்படி இருந்தது? என்று ஆய்வுசெய்ய மத்திய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில், தேசிய அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 274 பள்ளிக்கூடங்களில் உள்ள 5 லட்சத்து 26 ஆயிரத்து 824 ஆசிரியர்கள், 34 லட்சத்து ஆயிரத்து 158 மாணவர்களிடம் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 'ஆன்லைன்' மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் இந்த ஆய்வில் 22 மாவட்டங்களிலுள்ள 19 ஆயிரம் ஆசிரியர்கள், 1 லட்சத்து 26 ஆயிரத்து 253 மாணவர்கள் பங்குகொண்டனர். தமிழக மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரியைவிட 4 புள்ளிகள் குறைந்திருப்பது, மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கிலத்திறனை தவிர மற்ற பாடங்களின் திறனும், 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் அனைத்து பாடங்களிலும் உள்ள திறனும், தேசிய சராசரியைவிட பெருமளவில் குறைந்துள்ளது. 10-ம் வகுப்பில் 2 சதவீத மாணவர்களே அறிவியல் பாடத்தில் சிறப்பான செயல்பாட்டை காட்டியிருக்கிறார்கள். 8-ம் வகுப்பில் 90 சதவீத மாணவர்கள் கணக்குப்பாடத்தில் மிகவும் திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வகுப்பையும் ஆய்வு செய்தால், கொரோனா நேரத்தில் தமிழக மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக குறைந்திருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் கற்றல் திறன் சற்று நன்றாக இருப்பதன் காரணம், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மூலம் கல்வி கற்க அனைத்து உபகரணங்களும் இருந்திருக்கிறது. டியூசன் படித்திருக்கிறார்கள் என்பதுதான். என்றாலும், அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 3, 5-ம் வகுப்பு மாணவர்கள், தனியார் பள்ளிக்கூட மாணவர்களைவிட திறன் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

என்னதான், ஆன்லைன் மூலம் கல்வி என்றாலும், ஆசிரியர்கள் முகமுகமாய் பார்த்து மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்து, அடிக்கடி கேள்விகள் கேட்டு, இடையிடையே தேர்வுகள் நடத்தி, மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்துகொள்ள ஆசிரியர்களுக்கு நேரடி வகுப்புகளே உகந்ததாக இருக்கும். மொத்தத்தில் இந்த 2 ஆண்டு கற்றல் இழப்பை சரிகட்ட இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்களும் கூடுதலாக உழைக்க வேண்டும், மாணவர்களும் கூடுதலாக படிப்பில் தங்கள் கவனத்தை செலவிடவேண்டும்.


Next Story