நரேந்திர மோடியின் தாய் பாசம்


நரேந்திர மோடியின் தாய் பாசம்
x

நீண்ட பல ஆண்டுகளுக்கு முன் வந்த ‘டெடிகேசன் டு மதர்’ அதாவது ‘அன்னைக்கு அர்ப்பணம்’ என்ற ஆங்கில நூலின் ஆரம்ப வரிகளில், கடவுள் உலகுக்கு மிக இனிமையான ஒரு பொருளை பரிசாக கொடுக்க நினைத்தார்.

நீண்ட பல ஆண்டுகளுக்கு முன் வந்த 'டெடிகேசன் டு மதர்' அதாவது 'அன்னைக்கு அர்ப்பணம்' என்ற ஆங்கில நூலின் ஆரம்ப வரிகளில், கடவுள் உலகுக்கு மிக இனிமையான ஒரு பொருளை பரிசாக கொடுக்க நினைத்தார். அதனால் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து, உலகுக்கு தாயை கொடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களும், பெரிய தலைவர்களும் தாயை போற்றித்தான் வணங்கியிருக்கிறார்கள். வணங்கியும் வருகிறார்கள். 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா?' என்ற திரைப்பட பாடல் கூட உண்டு.

அந்த வகையில்தான் பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த சனிக்கிழமை தன் தாய் ஹீராபென் மோடி 99 வயதை பூர்த்திசெய்து, 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நாளில், குஜராத் தலைநகர் காந்திநகர் சென்று தன் தாய்க்கு பாதபூஜை செய்து வணங்கியது எல்லோருடைய உள்ளத்தையும் உருக வைத்தது. பெருந்தலைவர் காமராஜர் போல நரேந்திர மோடியும் வெளியே தாய்பாசத்தை காட்டாவிட்டாலும், மனதுக்குள் எவ்வளவு பாசத்தை வைத்து இருக்கிறார் என்பது அவர் எழுதிய வலைப்பதிவில் தெரிகிறது. தாம் சிறு வயதில் சந்தித்த இன்னல்களை நினைவு கூர்ந்த பிரதமர், "எனது அன்னை எவ்வளவு அற்புதமானவரோ, அவ்வளவு எளிமையானவர் எல்லா தாய்மார்களையும் போல" என்று தாய்க்குலத்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

வத் நகரில் மண்சுவர் மற்றும் களிமண் ஓடுகளாலான சிறிய வீட்டில் தமது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோருடன் வாழ்ந்ததையும், தன் தாய் வறுமையை சந்தித்து, வெற்றிகரமாக சமாளிக்க பட்ட எண்ணற்ற அன்றாட துன்பங்களையும் குறிப்பிட்டுள்ளார். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ததோடு, குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக தன் தாய் எவ்வாறு உழைத்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சில வீடுகளில் தன் தாய் பாத்திரங்கள் கழுவியதையும், வீட்டு செலவுகளை சமாளிக்க ராட்டை சுற்றியதையும் கூறியுள்ளார். தூய்மை மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபடுவோர் மீது தன் தாய் ஆழ்ந்த மரியாதை கொண்டு இருந்ததாக பிரதமர் கூறியதில் இருந்து, தாயின் குணம் அவருக்கு இருக்கும் காரணத்தால்தான் "தூய்மை இந்தியா" திட்டத்தில் பிரதமருக்கு இப்போது அதிக முனைப்பு இருக்கிறது போலும்.

பிரதமரின் தாயும், தந்தையும் மத நல்லிணக்கத்தில் எவ்வளவு பற்றோடு இருந்து இருக்கிறார்கள் என்பது இந்த பதிவில் தெரிகிறது. இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த தன் தந்தையின் நெருங்கிய நண்பரின் அகால மரணத்துக்கு பிறகு, அவரது மகன் அப்பாசை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து, அங்கேயே தங்கி இருந்து படிப்பை நிறைவு செய்ததையும், தன் குழந்தைகளுக்கு இணையாக அப்பாசிடமும் தன் தாய் பாசமாக இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஈத் பண்டிகையின்போது அப்பாசுக்கு பிடித்த உணவு வகைகளையும் செய்து கொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார். இப்போது அப்பாஸ் ஆஸ்திரேலியாவில் தன் மகனுடன் வசிக்கிறார்.

பஞ்சாயத்து முதல் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் மோடியின் தாயார் வாக்களித்துள்ளார். குஜராத் முதல்-மந்திரியாக மோடி பதவியேற்றவுடன், அவரது தாயார், "ஒருபோதும் நீ லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும். எந்த தவறான காரியத்தையோ அல்லது பிறருடன் சேர்ந்து தவறான செயல்களையோ செய்யாமல், ஏழைகளுக்காக தொடர்ந்து பணியாற்று" என்று அறிவுறுத்தியது பற்றி தெரிவித்த மோடி, "என் அன்னையின் வாழ்க்கை பயணத்தில் இந்திய பெண்களின் தவம், தியாகம் மற்றும் பங்களிப்பை நான் காண்கிறேன், இந்திய பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஒவ்வொரு இழப்பின் பின்னணியிலும், ஒரு தாயின் ஒளிமயமான கதை உள்ளது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் மேலே, ஒரு தாயின் வலுவான உறுதிப்பாடு உள்ளது" என்று தன் தாய் பற்றி எழுதிய செய்தியில், ஒட்டுமொத்த அன்னையர்களுக்கே மோடி புகழ்மாலை சூட்டியுள்ளார்.


Next Story