காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்


காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்
x

காங்கிரஸ் கட்சி மிகவும் பழம்பெரும் கட்சியாகும். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் குறைவதில்லை.

காங்கிரஸ் கட்சி மிகவும் பழம்பெரும் கட்சியாகும். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் குறைவதில்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட கட்சியாகும் இது. இந்த கட்சியின் வரலாறு மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது. 1857-ம் ஆண்டு புரட்சிக்கு பிறகு, இனி மீண்டும் ஒரு புரட்சி வரக்கூடாது, நமது போராட்டங்களை ஜனநாயக முறையிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து எடுத்து செல்வோம், நமது கோரிக்கைகளை எடுத்துரைக்க ஒரு அமைப்பு தேவை என்ற நோக்கத்துடன், சில தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆங்கிலேயர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் உதவியாக இருந்தார்.

1885-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்தது. முதல் தலைவர் உமேஷ் சந்திரா பானர்ஜி. அந்த ஆண்டு முதல் 1933 வரை, தலைவரின் பதவி காலம் ஒரு ஆண்டாகத்தான் இருந்தது. 1933 முதல் தலைவர் பதவிக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு என்பது நீக்கப்பட்டது. நேரு குடும்பத்தினர் மட்டுமல்லாமல், பல தலைவர்கள் இந்த பதவியை அலங்கரித்து இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 61 தலைவர்கள் இந்தப்பதவியில் இருந்து இருக்கிறார்கள். இதுவரை பதவியில் இருந்த தலைவர்களில், நீண்டகாலம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தது சோனியாகாந்திதான். 1998 முதல் 2017 வரை தலைவராக இருந்தார். அதன்பிறகு, ராகுல்காந்தி தலைவராக இருந்தார். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தன் பதவியை ராஜினாமா செய்துவிடவே, மீண்டும் சோனியாகாந்தி இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அவர் தன் உடல் நலத்தை கருத்தில்கொண்டு, தலைவர் பதவியில் நீடிக்க மறுத்துள்ள நிலையில், இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக மதுசூதன் மிஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு திரும்பப்பெறுவது, பரிசீலனைக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் மாதம் 8-ந்தேதி வெளியிடப்படுகிறது. போட்டி இருந்தால் அக்டோபர் மாதம் 17-ந்தேதி அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தல் நடக்கிறது. 19-ந்தேதி டெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

"இந்த தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை" என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறிவிட்டார். தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் தெரிவித்தாலும், மக்களிடையே கட்சிக்குள்ள இணைப்பை வலுப்படுத்த இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேச ஒற்றுமை பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொண்டு நடந்துவருகிறார். காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் நடந்துவரும் அவரது தியாகம் இணையற்றது. அவர்தான் தலைவர் பொறுப்பையேற்கவேண்டும் என்று தமிழ்நாடு உள்பட இதுவரை 12 மாநிலங்களுக்கும் மேலுள்ள காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன என்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கோபண்ணா.

ஆனால், ராகுல்காந்தி போட்டியிடப்போவதில்லை என்றே தெரிகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சசி தரூர் ஆகியோர்தான் களத்தில் இறங்குவார்கள் என்று கூறினாலும், அசோக் கெலாட்டை போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும், சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்-மந்திரியாக பொறுப்பை ஏற்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தேர்தலில் 9 ஆயிரம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள்தான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கவேண்டும். தான் யாருக்கும் ஆதரவாக இல்லை என்று சோனியாகாந்தி அறிவித்துவிட்டார். தேர்தல் நடக்குமா?, ஒருமனதான தேர்வா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.


Next Story