சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 27 பேர்தான் தேர்வா?


சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 27 பேர்தான் தேர்வா?
x

இந்தியாவில் மத்திய-மாநில அரசுப் பணிகளில் உயரிய பதவிகள் என்றால், அது சிவில் சர்வீசஸ் தேர்விலுள்ள 24 பணிகள்தான்.

இந்தியாவில் மத்திய-மாநில அரசுப் பணிகளில் உயரிய பதவிகள் என்றால், அது சிவில் சர்வீசஸ் தேர்விலுள்ள 24 பணிகள்தான். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற அகில இந்திய பணிகள்தான் இந்த 24 பணிகளில் அடங்குகிறது. ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இதற்காக முதல் நிலை, முதன்மை தேர்வுகளை நடத்தி, இறுதியாக நேர்முக தேர்வையும் நடத்துகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு 685 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 508 பேர் ஆண்கள், 177 பேர் பெண்கள். "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்ற பாரதியார் பாடலுக்கேற்ப, 7 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் 3 இடங்களை பெண்கள் பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில், முதல் இடத்தில் டெல்லியை சேர்ந்த சுருதி சர்மாவும், 2-வது இடத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த அங்கிதா அகர்வாலும், 3-வது இடத்தை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காமினி சிங்லாவும் பெற்றுள்ளனர். இவர்களை தவிர, 8-வது இடத்தை டெல்லியை சேர்ந்த இஷிதா ரதி என்ற பெண்ணும் பிடித்துள்ளார். இவர்கள் எல்லோருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்ற சுருதி சர்மா, ஜாமியா மில்லியா இஸ்லாமியா இலவச உள்ளுறை பயிற்சி அகாடமியில் படித்துத்தான் தேர்வு பெற்றுள்ளார். இந்த பயிற்சி மையத்தில் படித்த 23 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 10 இடங்களை பெண்கள் பெற்றுள்ளனர். முதல்தர இடங்களை பெற்ற மூவருமே, 2-வது, 3-வது முறையாக எழுதிய தேர்வில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இந்த 685 பணியிடங்களில், 180 இடங்கள் ஐ.ஏ.எஸ். பணிக்கும், 37 இடங்கள் ஐ.எப்.எஸ். பணிக்கும், 200 இடங்கள் ஐ.பி.எஸ். பணிக்கும், மீதி இடங்கள் இதர பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதலிடத்தை பெற்றவர், சுவாதி ஸ்ரீ என்ற ஊட்டியை சேர்ந்த பெண்தான். இவர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசப் பயிற்சியை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் முதலிடத்தை பெற்ற பெருமை சுவாதி ஸ்ரீ-க்கு கிடைத்தாலும், அகில இந்திய அளவில் அவர் 42-வது இடத்தில் இருக்கிறார். மேலும், தமிழ்நாட்டிலிருந்து 27 பேர்தான் தேர்வு பெற்றுள்ளனர் என்பது மனநிறைவு அளிப்பதாக இல்லை. இதுதவிர, இவர்களில் எத்தனை பேர் தமிழ்நாட்டில் தேர்வெழுதிய வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. நமது மாநிலத்திலிருந்து கடந்த முறை 44 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டிலிருந்து முதல்நிலை தேர்வை எழுதியிருக்கிறார்கள். கடந்த 2, 3 ஆண்டுகளாகவே தமிழில் தேர்வு எழுதியவர்கள் ஓரிரு பேர்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் உடனடியாக நல்ல வேலை கிடைத்துவிடுவதால், ஐ.ஏ.எஸ். போன்ற அகில இந்திய பணிகள் மீது நாட்டம் குறைந்திருக்கிறது. மேலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ள புலமை குறைவையும் ஒரு காரணமாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற தேர்வுகளை எழுதுவதற்கு 2, 3 ஆண்டுகளாவது முழுமூச்சுடன் அதற்கான தயாரிப்பில் ஈடுபடவேண்டும். நமது கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கு இதற்கான ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களும் அதற்காக கடுமையாக உழைத்தால்தான் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற முடியும். அகில இந்திய பணிகளில் ஜொலிக்க முடியும். எனவே, இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை ஒரு பாடமாக வைத்துக்கொண்டு, மாணவர்களும், கல்லூரிகளும், தமிழக அரசும் அதற்கான முனைப்புகளில் ஈடுபட்டால்தான், அடுத்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் தமிழகத்திலிருந்து வெற்றி எண்ணிக்கையை பார்க்க முடியும்.


Next Story