அரசியல் நாகரிகத்தை பறைசாற்றிய பிரதமர் - முதல்-அமைச்சர் !


அரசியல் நாகரிகத்தை பறைசாற்றிய பிரதமர் - முதல்-அமைச்சர் !
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்து ஒரு ஆண்டை கடந்துவிட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்து ஒரு ஆண்டை கடந்துவிட்டது. ஆனால், அரசு சார்பில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பிரமாண்டமான விழாவில், ஒரே மேடையில் பிரதமர் நரேந்திரமோடியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டனர். இருவருக்கும் வெவ்வேறு கொள்கைகள் இருந்த நிலையில், இந்த கூட்டத்தில் அவர்களின் பேச்சுகள் எப்படி இருக்குமோ?, இருவருடைய உறவும் எந்த வகையில் பிரதிபலிக்குமோ? என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இருபெரும் தலைவர்களுமே, அரசியல் நாகரிகத்தோடு, மிகவும் கண்ணியத்தோடு இந்தக் கூட்டத்தில் தங்கள் செயல்களையும், பேச்சுகளையும் எடுத்துக்காட்டினர்.

பிரதமர் மேடைக்கு வந்தவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்தார். மிக நெருங்கிய நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டுவதுபோல இருந்தது. பிரதமரின் 'லைட் ஹவுஸ்' செயல் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் பயனாளிகளுக்கு வழங்குவதாக நிகழ்ச்சி நிரலில் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் கைகளை பிடித்து அருகில் அழைத்து, பின்னர் 2 பேரும் சேர்ந்து பயனாளிகளுக்கு வீட்டு சாவியை வழங்கிய பாங்கு மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது.

இதுமட்டுமல்லாமல், முதல்-அமைச்சர் விழாவில் பேசி முடித்துவிட்டு வந்தவுடன், பிரதமர் அவரின் கைகளை பிடித்துக்கொண்டு பாராட்டு தெரிவித்ததும், அவர் பண்பை எதிரொலித்தது. எந்தக் கூட்டத்திலும் தமிழ் மொழியின் இலக்கியத்தை எடுத்துக்கூறும் பிரதமர், இந்தக் கூட்டத்தில், "செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்ற பாடலை பாடியது, தமிழ் மக்களின் காதில் தேன் ஊற்றியதுபோல் இருந்தது. "தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்பதோடு, தமிழ் கலாசாரமும் உலகம் முழுவதும் பிரசித்திபெற்றது. தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை பிரபலப்படுத்த மத்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது" என்று அவர் கூறியது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பேசும்போது, "உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்" என்று கூறியது மறைந்த கலைஞர் கருணாநிதியின் முழக்கத்தை செயல்படுத்துவதாக அமைந்தது. ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாக இந்தக்கூட்டத்தில் அவர் தன்னை நிரூபித்துக் கொண்டார். "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கிவைக்க வருகை தந்ததற்காக தமிழக மக்களின் சார்பிலும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையிலும், பிரதமருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேச்சை தொடங்கிய அவர், இறுதியாக தன் பேச்சை முடிக்கும்போது, "ஒன்றிய அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்த முன்வந்த திட்டங்களுக்கும், வருங்காலத்தில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களுக்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறி, "நான் எப்போதும் உறவுக்கு கைகொடுப்பேன்" என்பதை பறைசாற்றிவிட்டார்.

அடுத்து, "உரிமைக்கு குரல் கொடுக்க தயங்கமாட்டேன்" என்பதை விளக்கும் வகையில், ரத்தின சுருக்கமாக தமிழிலும், ஆங்கிலத்திலும் தன் கோரிக்கையாக, "கச்சத்தீவை மீட்கவேண்டும். 'நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத் தொகையான ரூ.14 ஆயிரத்து 6 கோடியை விரைந்து வழங்கவேண்டும். தமிழை அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்கவேண்டும்" என்பதை ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்.

தனது திராவிட மாடல் நிர்வாகம் என்றால் என்ன? என்பதை எல்லோருக்கும் விளக்கிவிட்டு, நமது நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும், தமிழ்நாடு எந்தவகையில் தன் பங்களிப்பை நல்கியிருக்கிறது என்று அவர் கூறியது, ஒவ்வொரு தமிழரின் நெஞ்சையும் நிமிர வைக்கிறது. மொத்தத்தில் சென்னையில் நடந்த விழாவில், பிரதமரின் பேச்சும் சரி, முதல்-அமைச்சரின் பேச்சும் சரி, இருவரும் நல்லுறவை வெளிக்காட்ட நடந்துகொண்ட செயல்பாடும் சரி, என்றென்றும் நினைவு கூரத்தக்க வகையில் இருக்கிறது.


Next Story