இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக்


இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக்
x

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டை அமிர்த பெருவிழாவாக இந்தியா கொண்டாடிவருகிறது.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டை அமிர்த பெருவிழாவாக இந்தியா கொண்டாடிவருகிறது. எந்த இங்கிலாந்து நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்றோமோ, அந்த நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆகியிருப்பது, இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். ரிஷி சுனக்கின் தாத்தா-பாட்டி சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் அடங்கிய பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களது சொந்த ஊரான குஜ்ரன்வாலா இப்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபில் இருக்கிறது. அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்கள். ரிஷி சுனக்கின் பெற்றோர் அங்கு இருந்து இங்கிலாந்தில் குடியேறினார்கள்.

இங்கிலாந்து கடந்த 2 மாதங்களில் 3 பிரதமர்களைப் பார்த்துவிட்டது. முதலில் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தார். அவருக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. பல மந்திரிகளின் ராஜினாமா படலத்தை தொடர்ந்து, இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி அவரும் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், காபந்து பிரதமராக அவர் இருந்தபின், அதே கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி பிரதமராக பொறுப்பேற்றார்.

அவர் பதவியேற்றவுடன் அவரது அரசாங்கம் ரூ.4½ லட்சம் கோடி அளவுக்கு வரிகுறைப்பு செய்தது. இதுபோல, லிஸ் டிரஸ் மேற்கொண்ட பல நடவடிக்கைகளால், பொருளாதாரம் தலைகீழாக சரிந்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் பல உறுப்பினர்கள் அவரை பதவி விலக வலியுறுத்தியதைத்தொடர்ந்து, பதவியேற்ற 44 நாட்களிலேயே ராஜினாமா செய்துவிட்டார். அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடும்போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை போட்டியில் வீழ்த்தி பிரதமரானார். இப்போது, அதே ரிஷி சுனக் போட்டியில்லாமல் பிரதமராகியிருக்கிறார்.

இவரது தகப்பனார் யஷ்விர் ஒரு டாக்டர். அவரது தாயார் உஷா ஒரு மருந்துக்கடை உரிமையாளர். ரிஷி சுனக் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அவருடன் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவும் படித்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ரிஷி சுனக்குக்கு இப்போது 42 வயதாகிறது. கடந்த 210 ஆண்டுகளில் இவர்தான் வயதில் குறைந்த பிரதமர். இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பிரதமர். இந்து மதத்தை சேர்ந்த முதல் பிரதமர். "நான் ஒரு பெருமைமிகு இந்து என்று எப்போதும் ரிஷி சுனக் கூறுவார். அவர் இந்து கோவிலுக்கு தன் குடும்பத்தோடு செல்ல தவறுவதில்லை. தீபாவளியை அவர் கொண்டாடிய நேரத்தில்தான் பிரதமர் பதவி கிடைத்துள்ளது. இந்துமத விழாக்களுக்கு யார் அழைத்தாலும் செல்வார்" என்கிறார், ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்று லண்டனிலுள்ள வாகை முத்தமிழ் முற்றம் நிறுவனரான வாகை திருசேதுக்கரை. 5 அடி 6 அங்குலம் உயரமே கொண்ட ரிஷி சுனக் சர்ச்சில் காலத்திலிருந்து குறைவான உயரம் கொண்ட பிரதமர் என்கிறது, இங்கிலாந்தில் வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகை. பதவியேற்கும் முன்பே இங்கிலாந்து-இந்தியா உறவு வலுப்பட பேசியிருக்கும் ரிஷி சுனக் இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவு என்பது மிக முக்கியமானதாகும் என்று பேசியிருக்கிறார். அவரது அரசாங்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு-வர்த்தக உறவு மேம்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


Next Story