மாணவர்களுக்கு தற்கொலை உணர்வு வரக்கூடாது


மாணவர்களுக்கு தற்கொலை உணர்வு வரக்கூடாது
x

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். அதுபோல 8, 9-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள், இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்கள். 2 ஆண்டுகளாக தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததால், அவர்களுக்கு தேர்வு நடக்கவில்லை. இந்த ஆண்டு திட்டமிட்டபடி தேர்வு நடந்து முடிந்து, நேற்றுமுன்தினம் இந்த 2 வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகின. பாடத்திட்டம் குறைப்பு, தேர்வில் எளிதான கேள்விகள், விடைத்தாள்கள் திருத்துவதில் மென்மையான நடைமுறை என்ற சூழ்நிலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர்.

பிளஸ்-2 தேர்வை மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் எழுதியதிலிருந்து, பெண் கல்வியில் தமிழ்நாடு அடைந்துள்ள நிலை பெருமைகொள்ள செய்கிறது. இதில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 மாணவிகள், 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 மாணவர்கள் என்று மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 93.76 சதவீதம். 2020-ம் ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட இது சற்று அதிகம். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் மேல்படிப்புக்கு செல்லவேண்டும். என்ஜினீயரிங் கல்லூரிகளிலேயே 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்கள் இருக்கின்றன. இதுதவிர மற்ற தொழிற்கல்விக்கான படிப்புகள், கலைக்கல்லூரிகள் என தமிழ்நாட்டில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியவர்களிலும் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவிகளும், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதிலும் மாணவிகளே அதிகம் பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆனால் 2019-ம் ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெற்ற சதவீதத்தைவிட, இது கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைவு. கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல்திறன் குறைந்திருப்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆண் கல்விக்கு சற்று முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இடைநிற்றல் நிலை மாணவர்களிடம் இருக்கிறதா? அப்படி என்றால், அதை சீர்செய்ய என்ன நடவடிக்கை தேவை? என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

தேர்வு முடிவு வெளியான நாளிலேயே 11 மாணவ-மாணவிகள் தேர்வில் பெற்ற தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இந்த பிஞ்சு வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதில் 10 பேர் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் 28 மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வகுப்புகளில் பாடங்களோடு வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும், வெற்றி, தோல்வியை சரிசமமாக எடுத்துக்கொள்ளும் பயிற்சிகளை அளிக்கும் மனநல பாடங்களையும் நடத்தவேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

துபாய் நாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் பஜிலா ஆசாத், இந்த தற்கொலைகள் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, 'பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களின் படிப்பில் அக்கறை எடுக்கும் அதே நேரத்தில், அவர்களின் மனநலத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். எந்த தேர்வாக இருந்தாலும் அது நம்மை இயக்குவதற்காகத்தானே தவிர, இயக்கத்தை நிறுத்துவதற்கு அல்ல, சிறு தோல்வியும் பெரும் வெற்றிக்கான மாற்றுப் பாதையாக அமையலாம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும், ஆலோசனை மையங்களும் மிகமிக முக்கியம் என்பதை ஒவ்வொரு தற்கொலையும் நம்மை உலுக்கி நினைவூட்டுகிறது' என்று குறிப்பிட்டுள்ளது முழுமையாக ஏற்புடையது. அந்த வழியில் வருகிற ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. இனியும் மாணவர்களிடையே தற்கொலை உணர்வு வேண்டாம்.


Next Story