செஸ் விளையாட்டின் பூர்வீகம் தமிழ்நாடு!


செஸ் விளையாட்டின் பூர்வீகம் தமிழ்நாடு!
x

1927-ம் ஆண்டு முதல் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்தாலும், இந்த செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை.

1927-ம் ஆண்டு முதல் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்தாலும், இந்த செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, பல்லவ மன்னர்களின் துறைமுக பட்டினமான மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் (28-ந்தேதி) தொடங்கி ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திரமோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இந்த ஆண்டு போட்டியும் ரஷியாவில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால், ரஷியா - உக்ரைன் போர் நடப்பதால், சர்வதேச செஸ் கூட்டமைப்பு அந்த வாய்ப்பை திரும்ப பெற்றுவிட்டது. இந்த போட்டியை நடத்த பல நாடுகள் போட்டி போட்டன. ஆனால், ஒரு பக்கம் இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட நேரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழக அரசு இந்த போட்டியை நடத்தும்" என்று கூறி, அதற்கான உறுதித்தொகையான ரூ.100 கோடியை கட்டி, இந்த பெரிய வாய்ப்பை, பெரிய பெருமையை தமிழ்நாட்டுக்கு பெற்று வந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. எங்கு திரும்பினாலும், இந்த போட்டியின் லோகோவான வேட்டி-சட்டையுடன் கூடிய செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் குதிரை காய் வணக்கம் தெரிவிப்பதுபோல, சின்னங்கள் தென்படுகிறது. இதுவரை இல்லாத அளவு, சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் 187 அணிகள் பொதுப்பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்துகொள்கின்றன. இதற்காக மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய செஸ் திருவிழாவையொட்டி, தமிழகத்திலுள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் செஸ் விளையாட்டுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த, மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. அறிவுக்கூர்மையை பயன்படுத்தி, விளையாடும் இந்த விளையாட்டில் வெற்றி பெறும் மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைத்துவரப்படுகிறார்கள். 187 நாட்டு வீரர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ளும் இந்த விளையாட்டின்போது, இந்த விளையாட்டின் பூர்வீகம் தமிழ்நாடுதான் என்பதை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும்.

இன்று செஸ் என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டு, பழங்காலங்களில் சதுரங்கம் என்று அழைக்கப்பட்டது இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், கீழடியில் நடக்கும் அகழ்வாராய்ச்சியில், சூளையில் சுடப்பட்ட சதுரங்க ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. இங்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற சுடுமண் ஆட்ட காய்கள் காஞ்சீபுரம், திருக்காம்புலியூர், திருக்கோவிலூர், போவோம்பட்டி போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்துள்ளது.

கீழடியில் கிடைத்த இந்த சதுரங்க ஆட்டக்காய்களை மதிப்பிடும்போது, நிச்சயம் சதுரங்க விளையாட்டு கி.மு. 6-ம் நூற்றாண்டில், அதாவது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் விளையாடப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அந்த காலங்களில், இது அரசர்களின் விளையாட்டாக கருதப்படுகிறது. அப்போது, அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படை வீரன் என்ற பெயர்களால் இந்த காய்கள் அழைக்கப்பட்டன. சாளுக்கியர்களின் தலைநகராக விளங்கும் பட்டடக்கல் விருப்பாட்சர் கோவிலில் இறைவன் சதுரங்க ஆட்டம் ஆடும் சிற்பங்களை இப்போதும் காணலாம். திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகில் பாமணி ஆற்றின் கரையில் உள்ள திருப்பூவனூர் கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் சதுரங்க வல்லபநாதர் என்று போற்றப்படுகிறார்.

இப்படி சதுரங்க விளையாட்டு உருவானது தமிழ்நாடுதான் என்பதை நினைக்கும்போது, ஒவ்வொரு தமிழனின் நெஞ்சும் பெருமையால் விம்முகிறது. இதை தமிழக மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். உலக நாடுகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதே, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கும் நேரத்தில் மக்களின் விருப்பமாக இருக்கிறது.


Next Story