இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி !


இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி !
x

அந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும், இந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும், இந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், சிறு வயதிலேயே இந்த கால மாணவர்கள் அதில் ஆற்றல் மிகுந்தவர்களாக ஆகிவிடுவதாலும், அவர்கள் பெரியவர்களைவிட எல்லாம் தெரிந்து வைத்திருந்தாலும், மனதளவில் மிகவும் பலவீனமாகி விடுகிறார்கள்.

பெற்றோரும், வீடுகளில் மாணவர்களை அந்தகால பெரியவர்கள் போல அடிப்பதில்லை, கிள்ளுவதில்லை, முழங்காலில் நிற்க சொல்வதில்லை, தோப்புகரணம் போட சொல்வதில்லை. சொன்னாலும், அதை கேட்டு கீழ்படிதல், இந்தகால குழந்தைகளுக்கு இல்லை. மேலும், சிறு குழந்தைகள் என்றாலும், அவர்கள் கேட்பதையெல்லாம் தங்களுக்கு அதை வாங்கிக்கொடுக்க பணம் இல்லையென்றாலும், கஷ்டப்பட்டாவது பெற்றோர் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இதனால், அந்த குழந்தைகளுக்கு எந்த ஏமாற்றமும் வாழ்வில் இல்லை. இப்படி வளர்க்கப்படும் அந்த குழந்தைகள், அதே உணர்வோடுதான் பள்ளிக்கூடங்களிலும் இருக்கிறார்கள். எதிர்பார்க்கிறார்கள்.

பழைய கால முறையில், மாணவர்களை ஆசிரியர்களும் இப்போது கண்டிக்க முடியாது. மாணவர்களை அடித்தால், பதிலுக்கு மாணவர்கள் திருப்பி அடிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆசிரியர், ஆசிரியைகளை மாணவர்களே கத்தியால் குத்திய, ஏன் கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆக, "மாணவர்களை திருத்துவதற்கு அடியும், உதையும் இனி தேவை இல்லை. வேறு அன்பான, அவர்கள் மனதை தொடும் வழிகள்தான் வேண்டும்" என சமுதாயம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக்கூடம் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளை கையாளும் சில வழிமுறைகளை தமிழக அரசின் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

பொது போக்குவரத்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், புகைப்பிடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், மற்ற குழந்தைகளை அடித்தல், ஆசிரியர்களை உடல் ரீதியாக காயப்படுத்துதல், அச்சுறுத்துதல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், சாதி, மத, பொருளாதார ரீதியாக மற்றவர்களிடம் பாகுபாடு பார்த்தல், புண்படுத்துதல் உள்பட குழந்தைகள் செய்யும் பெரும்பாலான தவறுகளை பட்டியலிட்டு, அந்த ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய குற்றங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், பள்ளி ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும். இதே தவறை அவர்கள், 2-வது மற்றும் 3-வது முறையாக செய்தால், ஆசிரியர்கள் கையாள வேண்டிய ஒழுங்குமுறை நுட்பங்களை கையாளலாம் என்று கூறியுள்ளது.

அதன்படி, 5 திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியர்களிடம் எழுதிக் காட்டவேண்டும், 2 நீதிக்கதைகளை பெற்றோரிடம் இருந்து கற்று, வகுப்பறையில் சொல்ல வேண்டும், 5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும். வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்துக்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்கவேண்டும். 5 வரலாற்று தலைவர்களைப்பற்றி அறிந்துகொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்கவேண்டும். சிறந்த ஆளுமைகளின் உண்மைக் கதையை கற்றுக்கொண்டு, வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்கவேண்டும். நல்ல பழக்க வழக்கங்கள் பற்றிய வரைபடம் எழுத வேண்டும், பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய வரைபடம் எழுதவேண்டுமென்பது உள்பட மேலும் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. 3-வது எச்சரிக்கையிலும் திருந்தாவிட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து குழந்தைகள் நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை, ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்கவேண்டும்.

இவ்வளவுக்கும் பிறகு 5-வது முறையாக தவறு செய்தால், சுற்றுசூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குபடுத்த உதவும் என்பதால், பள்ளி நிர்வாக குழு ஒப்புதலோடு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது வரவேற்கத்தக்க பரிந்துரைகளாகும். எந்த இடத்திலும் மாணவர்களை அடிக்க சொல்லவில்லை. தவறு செய்யும் மாணவர்களின் அறிவை மேம்படுத்தும், தன்னைப்பற்றி உயர்வான எண்ணத்தை தோற்றுவிக்கும் இந்த வகைகளிலேயே குழந்தைகளை திருத்தலாம்.


Next Story