இந்திய கடற்படையின் பெருமை விக்ராந்த்!


இந்திய கடற்படையின் பெருமை விக்ராந்த்!
x

இந்தியா ஒரு தீபகற்ப நாடு. 7,516.6 கிலோ மீட்டர் கடலோர பகுதி கொண்ட இந்தியாவின் பாதுகாப்புக்கு கடற்படையின் பங்கு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இந்தியா ஒரு தீபகற்ப நாடு. 7,516.6 கிலோ மீட்டர் கடலோர பகுதி கொண்ட இந்தியாவின் பாதுகாப்புக்கு கடற்படையின் பங்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். சீன கடற்படையில் 330-க்கு மேற்பட்ட போர் கப்பல்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அந்த அளவு இல்லை. எனவே, இந்தியாவின் கடற்படை இன்னும் வலுப்படுத்தப்படவேண்டும்.

இந்திய கடற்படையில் தற்போது பெரிய விமானம் தாங்கி கப்பலின் சேவை மிகவும் தேவை. முதலாவதாக, 1957-ம் ஆண்டுதான் இங்கிலாந்து நாட்டின் கடற்படையில் 2-ம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டு, போர் முடிந்ததும் பயன்படுத்தப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருந்த எச்.எம்.எஸ். ஹெர்குலஸ் என்ற விமானம் தாங்கி கப்பல், இந்திய கடற்படைக்கு வாங்கப்பட்டது. "வெற்றி கரமானது, ஆற்றல் மிக்கது" என்ற அர்த்தம் கொண்டதாக இருக்கும் வகையில், இந்தக் கப்பலுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்று பெயர் சூட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டதும், 1961-ம் ஆண்டு இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது.

1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய போரில், விக்ராந்த் கப்பல் மகத்தான சேவையாற்றியது. 1997-ம் ஆண்டு விக்ராந்த் கப்பல் மிகவும் பழமையான நிலையில், பயன்பாட்டிலிருந்து விடைகொடுக்கப்பட்டது. அதன்பின்பு மும்பையில் மியூசியம் கப்பலாக நிறுத்தப்பட்டு, 2014-ம் ஆண்டு அதை நொறுக்கி இரும்பு கழிவுகளாக்க ஏலம் போடப்பட்டது.

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் கப்பலுக்கு பதிலாக, அதே பெயரில் மற்றொரு கப்பலை கடற்படையில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கப்பலை பழைய கப்பலாக வாங்காமல், முழுக்க.. முழுக்க.. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "மேக் இன் இந்தியா" கப்பலாக கட்டுவதற்கான பணிகள் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. மத்திய அரசாங்க பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த விக்ராந்த் போர் கப்பல், இந்திய கடற்படையின் போர் கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டது.

முதலில் புறப்பகுதியும், 2009-ல் கப்பலின் அடிப்பகுதியும் முடிவடைந்தவுடன், முதற்கட்ட பணிகள் 2013-ல் முடிந்தது. தொடர்ந்து அனைத்து பணிகளும் முடிந்து, பலதரப்பட்ட கடற்பயிற்சிகளையும் விக்ராந்த் நிறைவு செய்துள்ளது. நாட்டின் பெரிய தொழில் நிறுவனங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பெரும்பாலான உபகரணங்கள் மற்றும் எந்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விக்ராந்த் கப்பலுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரித்த உபகரணங்கள், கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.

இந்த கப்பலில் உள்நாட்டு உள்ளடக்கம் 76 சதவீதம் ஆகும். 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட விக்ராந்த், ஏறத்தாழ 43 ஆயிரம் டன் எடையை தாங்கக் கூடியதாகும். 2,200 அறைகளை கொண்ட விக்ராந்த் கப்பலில் பெண் அதிகாரிகள், மாலுமிகளுக்காக தனித்தன்மை கொண்ட அறைகள் உள்பட 1,600 அறைகள் கப்பலில் பணியாற்றுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 28 கடல் மைல் ஆகும். விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்பட 31 போர் விமானங்களை இந்த கப்பலில் இருந்து இயக்க முடியும்.

இந்திய கடற்படையின் பெருமையான விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை கொச்சி கடற்படை தளத்தில் பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை 9.30 மணிக்கு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். முழுக்க.. முழுக்க.. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விக்ராந்த் கப்பல் இந்திய கடற்படைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பெருமை. "தற்சார்பு இந்தியா" மற்றும் "மேக் இன் இந்தியா" முன்முயற்சிக்கான நாட்டின் நடவடிக்கைகளில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இந்த கப்பலின் கட்டுமானம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இனி அனைத்து துறைகளிலும் சுய சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கைக்கான வெளிச்சம் 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் தெரிந்துவிட்டது.


Next Story