வரலாற்றை உருவாக்குமா? குஜராத், இமாசல பிரதேச தேர்தல்கள்


வரலாற்றை உருவாக்குமா? குஜராத், இமாசல பிரதேச தேர்தல்கள்
x

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும்போது, அந்த மாநில மக்களின் மனஓட்டம் தெரிந்துவிடுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும்போது, அந்த மாநில மக்களின் மனஓட்டம் தெரிந்துவிடுகிறது. எந்த கட்சிக்கு ஆதரவு? எந்த கட்சி தங்களை அடுத்த 5 ஆண்டுகள் ஆளவேண்டும்? என்ற மக்களின் எண்ண வெளிப்பாடுகளே தேர்தல் முடிவுகள். அந்த வகையில், இப்போது இமாசல பிரதேசத்திலும், குஜராத்திலும் தேர்தல் நடக்க இருக்கிறது. இமாசல பிரதேசத்தின் தற்போதைய சட்டசபை ஆயுள் காலம் 2023-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதியுடனும், குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18-ந்தேதியுடனும் முடிகிறது. இரு மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தி, ஒரே நாளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

68 தொகுதிகள் கொண்ட இமாசல பிரதேசத்தில் டிசம்பர் மாதத்தில் அதிக அளவில் பனிப்பொழிவும், இயற்கை இடர்பாடுகளும் ஏற்படும். இதைக் கருத்தில்கொண்டு, அங்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 8-ந்தேதிதான் ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றுதான் குஜராத் தேர்தலுக்குப் பிறகும் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இரு மாநிலங்களிலுமே இப்போது பா.ஜ.க.தான் ஆட்சி செய்கிறது. இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெயராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. 2017 தேர்தலில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 44 இடங்களில் வெற்றி பெற்று மிக பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வும், காங்கிரசும் மாறி மாறித்தான் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன. இந்த முறை அந்த வரலாறு மாறுமா?, நீடிக்குமா? என்பது டிசம்பர் 8-ந் தேதிதான் தெரியும்.

குஜராத் என்றாலே பிரதமர் நரேந்திர மோடிதான் நினைவுக்கு வருவார். அவரது சொந்த மாநிலம். காந்தி பிறந்த மாநிலம். கடந்த 6 சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறது. இந்திய வரலாற்றில் 6 முறை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரியாக இருந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு. இவர் 1977 முதல் 2000 வரை மேற்கு வங்காள முதல்-மந்திரியாக இருந்து பெரிய முத்திரையை பதித்துள்ளார். குஜராத்திலும் முதல்-மந்திரிகள் மாறினார்களே தவிர, கடந்த 6 முறையாக பா.ஜ.க. தான் ஆட்சி பீடத்தில் இருந்து இருக்கிறது. 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் 2014-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி வரை குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி 4 முறை இருந்துவிட்டுத்தான் பிரதமரானார்.

இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தேர்தலில் போட்டி பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் இருந்தது. ஆனால் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1, 5-ந்தேதிகளில் நடக்கும் தேர்தலில் மும்முனைப்போட்டியாக ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. குஜராத்தை நாங்கள் உருவாக்கினோம் என்ற தேர்தல் முழக்கத்துடன் நரேந்திரமோடி பிரசாரம் செய்யும் நிலையில், 7-வது முறையாக வெற்றி பெற்று பா.ஜ.க. புதிய வரலாறு படைக்குமா?, ஆம் ஆத்மி எந்த அளவு பலமான கட்சியாக இருக்கும்?, காங்கிரசின் நிலை என்னவாக இருக்கும்? என்பதற்கெல்லாம் விடை டிசம்பர் 8-ந்தேதி தெரிந்துவிடும்.


Next Story