தொடர்ந்து வட்டி உயர்வா?


தொடர்ந்து வட்டி உயர்வா?
x

பொருளாதாரத்தில் விலைவாசி உயர்வின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். குடும்ப பட்ஜெட்டில் விலைவாசி உயர்வு துண்டு விழச்செய்யும்.

பொருளாதாரத்தில் விலைவாசி உயர்வின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். குடும்ப பட்ஜெட்டில் விலைவாசி உயர்வு துண்டு விழச்செய்யும். விலைவாசியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியை, அதாவது ரெப்போரேட்டை உயர்த்தும். பொதுவாக 3 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிநிலை குழு கூடி ரெப்போரேட் உள்பட பல முடிவுகளை எடுத்து அறிவிக்கும். கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கூடி ரெப்போரேட்டில் 50 புள்ளிகள், அதாவது 0.5 சதவீதம் வட்டியை உயர்த்தியது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த உயர்வு என்றும், வளர்ச்சிக்காகவும் என்றும் காரணங்கள் கூறப்பட்டன.

கடந்த மே மாதம் ரெப்போரேட் விகிதம் 4.4 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது 5.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4 காலாண்டுகளாக இந்த உயர்வு இருந்தது. இதன் காரணமாக, வங்கிகள் அதிக வட்டிக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கவேண்டியது இருந்தது. இந்த சுமையை வங்கிகள் தங்களிடம் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்பட பல்வேறு கடன்களை வாங்கியவர்கள் மேல் சுமத்தியது. முன்பு வங்கிகளிலிருந்து 7 சதவீத வட்டிக்கு வீட்டுக்கடன் வாங்கியவர்கள், 8.9 சதவீதம் வட்டி கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், மாறுபடும் வட்டியில் (புளோட்டிங் ரேட்) வீட்டுக்கடன் வாங்கியவர்களின் கடனைக்கட்டும் மாத தவணைக்காலமும் அதிகரித்துவிட்டது. இந்த ஆண்டு சில்லரை பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. தாங்கக்கூடிய அளவு விலைவாசி உயர்வாக 6 சதவீதத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

இந்தநிலையில், தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு சில்லரை பொருட்களின் விலைவாசி செப்டம்பர் மாதத்தில் 7.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆகஸ்டு மாதத்தில் 7 சதவீதமாகத்தான் இருந்தது. இப்போது உயர்ந்துள்ள விலைவாசி உயர்வு, தொடர்ந்து 8 மாதங்களாக உயர்ந்து வரும் நிலையாகும். நுகர்வோர் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு 50 சதவீதத்துக்கு மேற்பட்ட காரணம் 12 பொருட்களின் விலைவாசிதான். இதில் 7 பொருட்கள் விவசாய விளை பொருட்களாகும். 5 பொருட்கள் விவசாய விளை பொருட்கள் அல்லாத மண்ணெண்ணெய், ரேஷன் பொருட்கள், வீட்டு வாடகை, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, டியூஷன் மற்றும் கல்வி கட்டணமாகும்.

மேற்கு வங்காளம், தெலுங்கானா, மத்தியபிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலைவாசி உயர்வு 8 சதவீதத்தை தாண்டிவிட்டது. அரியானா மாநிலத்தில் 7.95 சதவீதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் கட்டுக்குள் இருக்கிறது. விலைவாசி உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், தொழில் உற்பத்தி குறைந்து இருப்பதும் கவலையளிக்கிறது. தொழில் உற்பத்தியும் 0.8 சதவீதம் சுருங்கிவிட்டது. இந்த சூழ்நிலையையெல்லாம் கருத்தில் கொண்டால், அடுத்த மாதம் கூடும் ரிசர்வ் வங்கியின் நிதிநிலைக் குழுவின் அவசர கூட்டம் இன்னும் ரெப்போரேட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்பட பல இனங்களின் வட்டி இன்னும் உயரும். இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறை, வாகனங்களின் உற்பத்தி, சிறுதொழில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். அந்தநிலை வராமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், மத்திய-மாநில அரசுகளும் எடுக்கவேண்டும்.


Next Story