நோட்டா

ஆனந்த் சங்கர் டைரக்‌ஷனில் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘நோட்டா’;

Update:2018-04-01 23:11 IST
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்துக்கு, ‘நோட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இவர், ‘பெள்ளி சூப்புலு,’ ‘அர்ஜுன் ரெட்டி’ ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்தவர்.

‘நோட்டா’ படத்தில் கதாநாயகியாக மெஹ்ரீன் நடிக்க, முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ‘அரிமா நம்பி,’ ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கதையை நம்பி படம் எடுப்பவர். கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவை போன்றவர்களுக்கு மொழி ஒரு பிரச்சினை அல்ல. ‘நோட்டா’ படத்தில் சத்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தி படங்களில் அமிதாப்பச்சன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் போல் இருக்கும்.

இந்த கதைக்குள் அரசியல் நுட்பங்கள், அரசியல் நகர்வுகள் அதிகம் இடம் பெற வேண்டும். அதற்கு அரசியல் தெரிந்த ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் கதையை தேர்ந்தெடுத்து, அவருடன் விவாதித்து, திரைக்கதை அமைத்தோம்.”

சத்யராஜ் கூறும்போது, “இந்த படத்தில் நான் பத்திரிகையாளர் ஞானியைப் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். படத்தில் என் தோற்றம் புதிதாக இருக்கும். இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

‘நோட்டா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடை பெறுகிறது. முக்கிய காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்