புதிய புரூஸ்லீ

புதிய புரூஸ்லீ கதையின் நாயகனாக ஷான் நடித்துள்ளார். படத்தில், 5 சண்டை காட்சிகளில் அவர் நடித்து இருக்கிறார்.;

Update:2018-05-08 14:03 IST
5 சண்டை காட்சிகளுடன் "புதிய புரூஸ்லீ"

சிறு வயதில் குடும்பத்தை இழந்த ஒரு இளைஞன், மன ஆறுதலுக்காக கிராமத்தில் இருந்து நகரத்துக்கு அழைத்து வரப்படுகிறான். அங்குள்ள மாமா வீட்டில் தங்குகிறான். அப்போது மாமா ஒரு பிரச்சினையில் சிக்குகிறார். அந்த பிரச்சினையில் இருந்து மாமாவை காப்பாற்றி விட்டு, அந்த இளைஞன் ஊருக்கே திரும்புகிறான்.

இப்படி உணர்வுப்பூர்வமான கதையுடன் உருவாகியிருக்கும் படம்தான், புதிய புரூஸ்லீ. என்று கூறுகிறார், படத்தின் டைரக்டர் முளையூர் ஏ.சோணை. இவர் மேலும் கூறுகிறார்:

நான், புரூஸ்லீயின் தீவிரமான ரசிகர். ஒரு நிகழ்ச்சியில், புரூஸ்லீயைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும் இளைஞர் ஷான், எனக்கு அறிமுகமானார். அவரை பார்த்ததுமே புரூஸ்லீயை பற்றி ஒரு படம் இயக்கலாம் என்ற ஆசை எனக்குள் உருவானது. ஷானை அழைத்து பேசினேன். என் விருப்பத்தை தெரிவித்தேன். ஏற்கனவே கராத்தேயில் 2 பிளாக் பெல்ட் வாங்கிய அவரும் படத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருந்தார்.

அவருக்கு 6 மாதங்கள் பயிற்சி அளித்து, புதிய புரூஸ்லீ கதையின் நாயகனாக மாற்றினேன். படத்தில், 5 சண்டை காட்சிகளில் அவர் நடித்து இருக்கிறார். இவருக்கு வில்லனாக சுரேஷ்நரங் என்ற புதுமுகம் நடித்துள்ளார். கதாநாயகியாக ரசியா நடித்துள்ளார். சவுந்தர்யன் இசையமைத்து இருக்கிறார். அவருடைய இசையில், 3 பாடல்கள் இடம் பெறுகின்றன.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை வந்தவாசி கே.அமான் தயாரித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்