பாண்டி முனி

கஸ்தூரிராஜா டைரக்ஷனில் `பாண்டி முனி' இதில், முனியாக பிரபல இந்தி நடிகர் ஜாக்கிஷராப் நடிக்கிறார். பாண்டி என்ற கதாபாத்திரத்தில், கதாநாயகி புதுமுகம் மேகாலி நடிக்கிறார்.;

Update:2018-05-11 13:04 IST
தமிழ் பட உலகில், தயாரிப்பாளர்களுக்கு பேய் படங்கள் குறைந்தபட்ச லாபம் சம்பாதித்து கொடுத்து விடுவதால், வகை வகையாக-விதம் விதமாக பேய் படங்கள் தயாராகி வருகின்றன. இதனால், பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய டைரக்டர்களின் கவனம் கூட பேய் படங்கள் பக்கம் திரும்பியுள்ளன. அந்த வரிசையில், டைரக்டர் கஸ்தூரிராஜாவும் பேய் படம் இயக்க முன்வந்து இருக்கிறார்.

இவர் இயக்கும் பேய் படத்துக்கு, `பாண்டி முனி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-

``இதுவரை கிராமத்து வாழ்வியலையும், காதலையும், குடும்ப உறவுகளையும் பதிவு செய்த நான், முதன்முதலாக ஒரு பேய் படத்தை இயக்குகிறேன். படத்தின் கதை-திரைக்கதை-வசனத்தையும் நானே எழுதியிருக்கிறேன். அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் சாமிக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் யுத்தத்தை கதை சித்தரிக்கும்.

சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான `பீரியட்' படம், இது. சாமி பாதி, பேய் பாதி என திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், முனியாக பிரபல இந்தி நடிகர் ஜாக்கிஷராப் நடிக்கிறார். பாண்டி என்ற கதாபாத்திரத்தில், கதாநாயகி புதுமுகம் மேகாலி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல் நடிக்கிறார். இவர்களுடன் அம்பிகா, பெராரே, சாயாஜி ஷின்டே, வாசு விக்ரம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தனுஷ் நடித்த `துள்ளுவதோ இளமை,' `காதல் கொண்டேன்,' `யாரடி நீ மோகினி,' `திருவிளையாடல் ஆரம்பம்' ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் சார்பில் படம் தயாராகிறது. இது, நான் இயக்கும் 23-வது படம். குரங்கனி, ஜவ்வாதுமலை ஆகிய இயற்கை எழில் மிகுந்த இடங்களிலும், மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.''

மேலும் செய்திகள்