தீர்ப்புகள் விற்கப்படும்
தமிழ் பட உலகமும், ரசிகர்களும் பெருமைப்பட்டுக் கொள்கிற மாதிரி நடிப்பு திறமை மிகுந்த நடிகர்களில் ஒருவர், சத்யராஜ். வில்லனாக அறிமுகமான இவர், `சாவி' என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.;
சத்யராஜ் நடிக்கும் புதிய படம் `தீர்ப்புகள் விற்கப்படும்'
பல தமிழ் படங்களில் சிறந்த குணச்சித்ர நடிகர் என்று நிரூபித்து வரும் அவர், `பாகுபலி,' `பாகுபலி-2' ஆகிய 2 படங்கள் மூலம் மிக சிறந்த குணச்சித்ர நடிகராக நாடு முழுவதும் பேசப்பட்டார். இப்போது அவர் நடித்து வரும் `தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத்தில், இதற்கு முன்பு பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண்களுக்காக போராடுகிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
இந்த படத்தை தீரன் டைரக்டு செய்கிறார். சஜீவ் மீராசாஹிப் தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் தீரன் கூறும்போது, ``படத்தின் கதாநாயகன் சமுதாய நீதிக்காக போராடும் போர் வீரன். சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில், சத்யராஜ் ஒரே தேர்வாக இருந்தார். அவருடைய எளிமை மற்றும் திறமையால் நான் ஈர்க்கப்பட்டேன்'' என்றார்.
தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் கூறும்போது, ``இந்த படத்தின் திரைக்கதை சத்யராஜை கேட்டது. டைரக்டர் தீரன் என்னிடம் கதையை சொன்னபோது, சத்யராஜ் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று உறுதியாக நம்பினோம். அந்த அளவுக்கு படத்தில் ஒரு கருத்து இருக்கிறது. அதை சொல்லும் அளவுக்கான சக்தி, சத்யராஜிடம் இருக்கிறது. படம், மிகப்பெரிய அளவில் பொதுமக்களை சென்றடையும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.