தேன்நிலவில் மனைவியை காணோம்

1968-ம் ஆண்டில், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் ‘புதிய பூமி’ படத்தில் கதாசிரியராக அறிமுகப் படுத்தப்பட்டவர், வி.சி.குகநாதன். அதன் பிறகு இதுவரை 250 படங்களில், கதாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, டைரக்டராக, தயாரிப்பாளராக தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில், இவருடைய பங்களிப்பில் பல படங்கள் வந்துள்ளன.;

Update:2018-12-14 00:40 IST
ஏவி.எம். நிறுவனத்தில் 35 படங்களிலும், ராமாநாயுடுவின் சுரேஷ் கம்பைன்ஸ் நிறுவனத்தில் 41 தெலுங்கு படங்களிலும் பணியாற்றியவர், இவர். ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை,’ மற்றும் ‘பெத்தமனம் பித்து,’ ‘கனிமுத்து பாப்பா,’ ‘மைக்கேல்ராஜ்,’ ‘மாங்குடி மைனர்,’ ‘மைனர் மாப்பிள்ளை’ உள்பட 51 படங்களை தயாரித்து இருக்கிறார்.

இவர் திரையுலகில் அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகின்றன. 50-வது வருடமான 2018-ல் ‘தேன்நிலவில் மனைவியை காணோம்’ என்ற புதிய படத்துக்கு வி.சி.குகநாதன் கதை-வசனம் எழுதியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக பிரபல முன்னணி கதாநாயகி பங்கு பெறுகிறார்.

இவர்களுடன் சார்லி, தம்பிராமய்யா, யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, லிவிங்ஸ்டன், மயில்சாமி, வையாபுரி உள்பட 12 நகைச்சுவை நடிகர்களும் நடிக்கிறார்கள். முக்கிய வேடங்களில் நாசர், பசுபதி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். பிரபல டைரக்டர்கள் பலரிடம் உதவி டைரக்டராக பணி புரிந்த விஜய் தேசிங்கு திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.

அபிராமி ராமநாதன் வழங்க, ஆரூரான், ஜெயா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு: நிலாபிரியன் விஜயமுரளி. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்