பாரம்

இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' திரைப்படத்தின் முன்னோட்டம்.

Update: 2020-02-20 21:16 GMT
இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது, ‘கிராப்புறங்களில் உள்ள தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படம்தான் 'பாரம்'. உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை.

இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருது 'பாரம்' படத்துக்கு கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு எளிதில் நிறைவேறும். இதற்காக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி பேசும் 'பாரம்' படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து 'பாரம்' படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.  'பாரம்' திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் விநியோகிக்கிறது.

மேலும் செய்திகள்