சம்சாரம் அது மின்சாரம் 2
கதம்பமான குடும்ப கதை ‘சம்சாரம் அது மின்சாரம்’ 2-ம் பாகம் தயாராகிறது சினிமா முன்னோட்டம்.;
ஏவி.எம். நிறுவனம் தயாரித்து, விசு எழுதி இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்,’ தேசிய விருது பெற்ற மிகப்பெரிய வெற்றி படம். விசு கடைசியாக கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படம், அது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது அவருடைய லட்சியமாக இருந்தது.
அவருடைய லட்சிய படைப்பை மக்கள் அரசன் பிக்சர்ஸ் ராஜா தயாரிக்க முன்வந்து இருக்கிறார். ஏற்கனவே இந்த நிறுவனம் சார்பில் விமல் நடிக்கும் ‘எங்கள் பாட்டன் சொத்து,’ விதார்த், யோகி பாபு நடிக்கும் ‘உலகமகா உத்தமர்கள்,’ பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘மேதாவி’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் இரண்டாம் பாகம், ‘சம்சாரம் அது மின்சாரம்-2’ என்ற பெயரில் தயாராகிறது. விசுவின் சிஷ்யன் வி.எல்.பாஸ்கர்ராஜ் டைரக்டு செய்கிறார். இவர், ஒரு தனியார் தொலைக்காட்சியில், ‘அகடவிகடம்’ என்ற விவாத நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
‘சம்சாரம் அது மின்சாரம்-2’ படத்துக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா விசு பணி யாற்றுகிறார். விசு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடை பெறுகிறது.
இந்த படத்தின் கதையை பற்றி டைரக்டர் பாஸ்கர்ராஜ் கூறும்போது, “இது சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் ரசிக்கக்கூடிய கதம்பமான ஒரு குடும்ப கதை. அனைத்து தரப்பினரையும் தியேட்டர்களுக்கு வரவழைக்கும் இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை. இன்னொரு வீட்டில் மின்சாரமாக இயங்கும் சம்சாரத்தின் கதை. படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கி காஞ்சிபுரம், தென்காசி மற்றும் பிலிப்பைன்சில் நடைபெற இருக்கிறது” என்றார்.