மாய மாளிகை
2 கதாநாயகிகளுடன் ‘மாய மாளிகை’ என்ற பெயரில் இன்னொரு சிரிப்பு பேய் படத்தின் முன்னோட்டம்.;
நகைச்சுவை, காதல், திகில் கலந்து, ‘மாயமாளிகை’ என்ற சிரிப்பு பேய் படம் தயாராகிறது. கே.என்.பைஜு டைரக்டு செய்கிறார். ‘மாயமாளிகை’ பற்றி இவர் கூறுகிறார்:
“இது, ஒரு பேய் படம். நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறேன். கதாநாயகிகளாக 2 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ரியாஸ்கான், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பாடல்களை சினேகன் எழுத, அஜெய் ஸரிகமா இசையமைக்கிறார். ஏ.பி.கேசவ தேவ் தயாரிக்கிறார்.
கதாநாயகனுக்கு ஒரு மலைப்பிரதேசத்தில் சொந்தமாக 10 ஏக்கர் பரப்பளவில் பழைய பங்களா இருக்கிறது. அவருக்கு திருமணமானதும் தனது மனைவியுடன் அந்த பழைய பங்களாவுக்கு செல்கிறார். அங்கு போனதும் திடுக்கிட வைக்கும் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அங்கே உள்ள ஒரு பேய், 40 வருடங் களுக்கு முன்பு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சொல்கிறது. அந்த சம்பவத்துக்கும், புதுமண தம்பதிக்கும் என்ன தொடர்பு? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் முதல் பாதி முழுக்க நகைச்சுவையாக இருக்கும். இரண்டாவது பாதி, திகிலாக இருக்கும். பேய் தொடர்பான காட்சிகளில், ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறோம். கதையின் ஒட்டு மொத்த சம்பவங்களும் பழைய பங்களாவுக்குள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.”