‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்

சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சினைகளை அலசிய படங்களை டைரக்டு செய்தவர், எஸ்.ஏ.சந்திரசேகரன்.

Update: 2017-08-01 07:01 GMT
இவர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவருடைய வேடம் ஏற்று நடிக்கிறார்.

இதுபற்றி எஸ்.ஏ.சந்திர சேகரன் கூறுகிறார்:-
பொதுமக்களின் நலனுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அப்படி அவர் தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர். அந்த தீர்ப்புகளால் பாதிக்கப்பட அதிகாரிகளும், ரவுடிகளும், மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு இவரை பல வகையில் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பலமுறை டிராபிக் ராமசாமியை கொல்ல முயற்சிகளும் நடைபெற்று இருக்கிறது. அப்படியிருந்தும் அவர் சமூகத்துக்காக இன்றும் போராடிக் கொண்டேதான் இருக்கிறார். அந்த போராட்ட குணம் என்னை கவர்ந்தது. என் உதவி இயக்குனரும், பல குறும் படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம், இந்த படத்தை இயக்குகிறார். கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கிறது.”

டைரக்டர் விஜய் விக்ரம் கூறும்போது, “வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுப்பதால், கதையில் பல திருப்பங்கள் யதார்த்தமாகவே அமைந்துள்ளன. இந்த படம் திரைக்கு வரும்போது, சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

மேலும் செய்திகள்