எனக்கு இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேடம், அவரது வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்- நடிகை ரோஜா

எனக்கு இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேடம்தான்.ஜெயலலிதா மேடத்தின் வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என நடிகை ரோஜா கூறி உள்ளார்.

Update: 2020-11-14 07:21 GMT
சென்னை
 
மகள் மற்றும் மகனுடன் செல்வமணி-ரோஜா திரை உலகில் நட்சத்திரமாக ஜொலித்த ரோஜா, அரசியல் களத்திலும் அபாரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்கள் குறித்து அவர் மனந்திறந்து பேசியிருக்கிறார். அதன் கேள்வி - பதில் விவரம்:

உங்கள் மகள் சினிமாவில் நடிப்பாரா?

என் மகள் அன்ஷு மாலிகாவுக்கு படிப்பில் ரொம்ப இஷ்டம். நானும், என் கணவர் செல்வமணியும் எங்கள் பிள்ளைகளை படிக்கணும் என்றோ- நடிக்கணும் என்றோ வற்புறுத்த மாட்டோம். அவர்கள் பெரியவர்களான பிறகு நடிக்க விரும்பினாலும், அரசியலுக்கு வர விரும்பினாலும் முழுமையாக ஆதரிப்போம். ஆனால் என் மகளுக்கு நன்றாக படித்து சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டதாக கருதுகிறீர்களா?

உரிமையை பெண்களுக்கு யாரும் தரவேண்டியதில்லை. அவர்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுவயது முதலே எனக்கு எங்கள் வீட்டில் முழு சுதந்திரம் கிடைத்தது. திருமணமான பிறகும் என் கணவர் முழு சுதந்திரம் கொடுத்தார். எனது கருத்தை தைரியமாக எப்போதும் சொல்வேன். நான் செய்வது சரியானது தான் என என் மனதுக்கு பட்டால் அதை தைரியமாக செய்வேன். அதற்காக போராட தயங்க மாட்டேன். எவ்வளவு பெரிய ஆளுடன் மோத வேண்டி இருந்தாலும் பின்வாங்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை உரிமைகளைப் பெறுவதில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது.

சினிமா துறையில் ‘மீ டூ’ போராட்டம் வலுத்து வருகிறது. அதுபோன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

பொதுவாக சில ஆண்கள் பெண்களை ஒரு என்டர்டைன்மென்ட் பொருளாக பார்க்கிறார்கள். பெண்கள் அவர்களின் வலையில் விழுவார்களா என முயற்சித்து பார்ப்பார்கள். அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்துதான் அதில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முடியும். இது சினிமா துறையினருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நடக்கும். எல்லாத் துறைகளிலும் நடக்கும். படித்தவர்கள், பாமரர்கள், கூலி வேலை செய்பவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா பெண்களும் எல்லா துறைகளிலும் எதிர்கொள்ளும் பிரச்சினை இது. ஆசையில் நினைத்ததை அடைய முயற்சிக்கும்போது இதுபோன்ற பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். அப்படித்தான் சிலர் அப்போது மாட்டிக்கொண்டு இப்போது வருத்தப்படுகிறார்கள். 

இதுபோன்ற நேரத்தில் நமது சுயமரியாதை பெரிதா?அல்லது நாம் நினைத்ததை அடைவது பெரிதா? என்று யோசித்துப்பார்க்க வேண்டும். நாம் சொந்த திறமையுடன், கடவுளின் ஆசியுடன் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். இந்த மாதிரி விஷயங்களில், இதுபோன்ற ஆண்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பெண்களின் ஆசை, பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ள நினைத்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார். அரசாங்கமும் தண்டிக்க வேண்டும்.

யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவீர்கள்?

எனக்கு இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேடம்தான். அவர் சினிமா, அரசியல் இரண்டிலும் ஜொலித்தார். சினிமா என்று வரும்போது ஜெயலலிதா அம்மா ஒரு அழகான ஹீரோயின். நல்ல படங்கள்- நல்ல பாடல்கள்- அழகான- கிளாமரான- திறமையான நடிகையாக இருந்தார். அதேநேரம் அரசியலிலும் தனி முத்திரை பதித்தார். நிறைய கஷ்டங்கள், அவமானங்களை சந்தித்தார். 

முதல்வரான பிறகு புரட்சிகரமான முடிவுகளை எடுத்தார். இப்போதும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார். எங்கள் திருமணத்தை அருகில் இருந்து நடத்தி வைத்தார். என்னை அவர் ஒரு மகள் போன்று பார்த்துக்கொண்டார். மக்களாட்சி படத்தில் ஜெயலலிதா அம்மா மாதிரி ஒரு சின்ன வேடத்தில் நான் நடித்தேன். அப்போதே எனக்கு அவர் மீது ஒரு காதல் ஏற்பட்டு விட்டது. ஜெயலலிதா மேடத்தின் வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார்?

ரஜினி சார், கார்த்திக், பிரபுதேவா, அஜித், பிரபு போன்றவர்களுடன் நடிக்கும்போது மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன். ரஜினி சாரின் ஸ்டைல், கார்த்திக்கின் நடிப்பு, பிரபுதேவாவின் நடனம் போன்றவை மிகவும் பிடிக்கும். அஜித்துடன் அரட்டை அடிக்க பிடிக்கும். பிரபு சார் என்றாலே சாப்பாடு தான் நினைவுக்கு வரும். அவர் வீட்டிலிருந்து விதவிதமான உணவு வகைகளை கொண்டு வந்து தருவார். எந்தெந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிடவேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இந்த ஐந்து பேரும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள்.

முழுநேர அரசியல்வாதியாகி விட்டீர்கள். அதனால் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

இப்போதைக்கு நான் முழு நேர அரசியல்வாதி. இடையிடையே நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன். என்னை இந்த அளவுக்கு ஆளாக்கிய என் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நல்லது செய்யும் வாய்ப்பு அரசியல் மூலம் கிடைத்துள்ளது. என் ரசிகர்கள் இதை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?

எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். நானும் செல்வமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனக்கு திருமணத்திற்கு முன்பு தைராய்டு இருந்ததால் எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்ற கவலை இருந்தது. ஆனால் கடவுள் தயவால் எனக்கு மகள் பிறந்தாள்.

நான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தபோது 2 மாதம் ரத்தப்போக்கு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தேன். நானும், என் குழந்தையும் உயிர் பிழைப்பதே கஷ்டம் என்று சொன்னார்கள். எனது மகன் நல்லபடியாக பிறந்தான். என் குழந்தைகளை பார்க்கும்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்வேன். அன்றிலிருந்து எனக்கு கடவுள் பக்தி அதிகரித்துவிட்டது. அதுதான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். நான் எங்கு சென்றாலும் ஷீரடி சாய்பாபாவை மனமுருகி வேண்டிக்கொள்வேன்.

இந்த தீபாவளியை எப்படி வித்தியாசமாக கொண்டாட இருக்கிறீர்கள்?

இந்த ஆண்டு எல்லோரும் புதுமையான முறையில் தீபாவளியை கொண்டாடுவோம். மாசில்லாத, சரவெடி சத்தமில்லாத, தூய்மையான, அமைதியான, பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியுடன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் ஆனந்தமாக தீபாவளியைக் கொண்டாடுவோம்.”

மேலும் செய்திகள்