நடிகை சம்விருதாவின் குழந்தை வளர்ப்பு அனுபவங்கள்

மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பிரபலமாக இருந்தவர் நடிகை சம்விருதா. நாற்பதுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்திருக்கும் இவர், தமிழில் உயிர், நம்ம கிராமம் போன்ற சினிமாக்களில் நடித்துள்ளார்.

Update: 2020-12-13 12:53 GMT
பிரபலமாக இருந்த காலகட்டத்தில் சம்விருதா திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் கணவர் அகிலோடு வசிக்கும் இவருக்கு அகஸ்தியா என்ற ஐந்து வயது ஆண் குழந்தை உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ருத்ரா என்ற குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் அனுபவம் பற்றி சம்விருதாவின் பேட்டி!

22 வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரம்.. பின்பு கதாநாயகி.. இப்போது இரண்டு குழந்தைகளின் தாய்.. இதை எல்லாம் எப்படி உணர்கிறீர்கள்?

காலம் வெகுவேகமாக கடந்துகொண்டிருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்தும் ஒன்பது மாதங்களாகிவிட்டன. அது தவழ்ந்து செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறது. அகஸ்தியா கூட சமீபத்தில்தான் பிறந்ததுபோல் தோன்றுகிறது. முன்பு வாகன பொம்மைகள் மீது அவன் ஈடுபாடுகாட்டினான். இப்போது போலீஸ் வாகனங் களையும், அது சம்பந்தமான விஷயங் களையும் ஆழ்ந்து கவனிக்கிறான்.

இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பே எனக்கு ஒருவித டென்ஷன் ஏற்படத்தான் செய்தது. அதுவரை அகஸ்தியா மட்டுமே எங்களது கொஞ்சலுக்குரிய குழந்தையாக இருந்து கொண்டிருந்தது. புதிய குழந்தையின் வருகையை அவன் எப்படி எதிர்கொள்வான் என்று நினைத்தோம். இங்கு ஆறாவது மாதத்திலேயே கர்ப்பத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் பார்த்து கூறிவிடுவார்கள். வயிற்றுக்குள் இருப்பது ஆண் குழந்தை என்று தெரிந்ததும் அவன் உற்சாகமாகிவிட்டான். இப்போது குழந்தைக்கு டயபர் மாற்றுவதற்கெல்லாம் உதவுகிறான். ருத்ரா எவ்வளவு அழுகையில் இருந்தாலும் அண்ணன் அருகில் வந்து சத்தம் கொடுத்ததும் அமைதியாகிவிடுவான்.

இரண்டு குழந்தைகளையும் அமெரிக்காவில் பெற்றெடுத்திருக்கிறீர்கள். அங்குள்ள பிரசவ நடைமுறைகள் எப்படி இருக்கும்?

அமெரிக்காவில் பிரசவத்திற்குரிய தேதியாகவே இருந்தாலும் வலி வந்தால்தான் மருத்துவமனையில் அனுமதிப்பார்கள். முடிந்த அளவு சுகப்பிரசவத்திற்குதான் முயற்சிப்பார்கள். முதல் குழந்தையை பெற்றெடுத்த கடைசி நிமிடங்களில் குழந்தையின் இதயத் துடிப்பு குறைந்தது. அதனால் சிசேரியன் செய்யும் நிலை ஏற்பட்டது. ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து ஆபரேஷன் செய்ததால், அவன் பிறந்தது எனது நினைவில் இல்லை. ருத்ராவுக்கு லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்ததால் அவனை வெளியே எடுத்ததை நான் நன்றாக உணர்ந்தேன். குழந்தை பிறந்ததும் அம்மாவுடன் சேர்த்து ‘ஸ்கின் டூ ஸ்கின்’ அணைத்துவைக்கும் முறை அங்கே உண்டு.

வீடு, குழந்தைகள், குடும்ப நிர்வாகத்திற்கு மத்தியில் உங்களுக்கான நேரத்தை எப்படி ஒதுக்கிக்கொள்கிறீர்கள்?

எனக்காகவும் நேரத்தை ஒதுக்க முயற்சிக்கிறேன். அகஸ்தியா பள்ளிக்கு செல்லும் நேரமும், ருத்ரா தூங்கும் நேரமும்தான் எனக்கான நேரம். அம்மா தற்போது என்னோடு இருப்பதால் குழந்தைகளை கவனிப்பது எளிதாகிறது. காலையில் நேரம் கிடைக்காவிட்டாலும் இரவில் சிந்திக்கவும், புத்தகங் களை வாசிக்கவும் நேரம் ஒதுக்கிக்கொள்கிறேன். அகிலும் குழந்தைகளை கவனித்துக்கொள்வார். எனது தங்கை சன்ஜீக்தா சென்னையில் உள்ள பிரபலமான அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறாள். எனது இரண்டாவது பிரசவத்திற்கு முன்பு அவளும் இங்குதான் இருந்தாள். அம்மா இங்கு வருவதற்கு முன்பு அவள்தான் எனக்கு உதவினாள்.

நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் நடிக்க வந்தீர்கள்? இனியும் நடிப்பீர்களா?

‘சத்தியம் பறைஞ்சால் விசுவாசிக்குமோ’ என்ற மலையாள சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சினிமாவில் நடிக்காமல் இருந்ததால் நிறைய விஷயங்களை இழந்துவிட்டேன் என்பதுபோல் தோன்றியது. சினிமா தரக்கூடிய எனர்ஜி அபூர்வமானது. அடுத்து அனுப் சத்யன் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்கிறேன். அமெரிக்காவில் இருந்தபடியே நடிக்கும் விதத்தில் அதற்காக திட்டமிட்டிருக்கிறோம். பயணம் செய்யாமல் வீட்டில் இருந்தே நடிக்கும் சினிமா என்பதால் வேலை எளிது. மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் இனியும் நடிப்பேன். அமெரிக்காவில் இருந்து என்னை இந்தியாவிற்கு வரவைத்து நடிக்கவைப்பதில் இருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று தெரியவில்லை.

கரோலினாவில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததா?

ஊரடங்கு இருந்ததில்லை. ஆனால் மாஸ்க்கும், சானிடைசரும் பயன்படுத்தினோம். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், மரணமடைந்தவர்களும் அதிகம் என்றாலும் வாழ்க்கையில் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. நாங்கள் ரொம்ப கவனமாக இருக்கிறோம். பொருட்கள் வாங்கக்கூட வெளியே செல்வதில்லை. எல்லாம் வீடு தேடி வந்துவிடுகிறது.

எப்போதும் புன்னகையோடு இருக்கிறீர்களே. உங்கள் மகிழ்ச்சியின் ரகசியம் என்ன?

என் அளவுக்கு எனக்கு மகிழ்ச்சியும், கவலைகளும் உண்டு. நேர்மறையாக சிந்திக்கவும், வாழ்க்கையில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை தேடவும் முயற்சிப்பேன். எதையும் நினைத்து குழம்ப மாட்டேன். வருவதை அவ்வப்போது சமாளித்துக்கொள்வேன். இதுதான் எனது மகிழ்ச்சியின் ரகசியம்.

மேலும் செய்திகள்