மம்மூட்டியின் இளமை இதோ.. இதோ..

மலையாள நடிகர் மம்மூட்டி. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் உடற் பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக பேணி வருகிறார்.

Update: 2021-02-21 15:29 GMT
`இப்போதும் அதே கம்பீரம்.. கட்டுக்கோப்பான உடலுடன் காட்சி தருகிறார்' என்று சில நடிகர்களை பார்க்கும்போது வியப்பாக சொல்லத்தோன்றும். அந்த வரிசையில் இடம்பிடிப்பவர், மலையாள நடிகர் மம்மூட்டி. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் உடற் பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக பேணி வருகிறார். அதற்காக அவர் தனக்கென்று தனி பயிற்சியாளரையும் வைத்திருக்கிறார்.

மும்மூட்டிக்கு பயிற்சியாளராக இருப்பவர், விபின் சேவியர். அவர் சொல்கிறார்: "மம்மூட்டி மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆனால், தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிடாததால் அது பற்றி பலருக்கும் தெரிவதில்லை. 2007-ம் ஆண்டில் இருந்து நான் அவருக்கு தனி பயிற்சியாளராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

முதல் நாள், நான் பணிபுரியும் உடற்பயிற்சி கூடத்திற்கு இரண்டு இளைஞர்கள் வந்து என்னை சந்தித்தார்கள். அவர்களில் ஒருவர், தனது தந்தைக்கு பயிற்சியளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரிடம் விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்திசெய்து தரும்படி சொன்னேன். அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்தபோது, அதில் நடிகர் என்றும், பெயர் முகமதுகுட்டி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்தேன். அப்போதுதான் வந்திருப்பவர்கள் மம்மூட்டியின் மகன் துல்கரும், அவரது நண்பரும் என்பது தெரிந்தது.

முதல் நாளன்று எங்கள் பயிற்சி மையத்தின் கதவினை திறந்துகொண்டு கம்பீரமாக மம்மூட்டி உள்ளே நுழைந்த காட்சி இப்போதும் என் மனதில் நிற்கிறது. உடற்பயிற்சி துறையில் எனக்கு இருக்கும் அனுபவங்கள் பற்றி அவர் என்னிடம் கேட்டறிந்தார். அப்போது `மும்பையில் பிரபல இந்தி நடிகை ஊர்மிளாவுக்கு பயிற்சியளித்திருக்கிறேன்' என்று நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். உடனே அவர் `நான் ஊர்மிளா போன்று ஆகவேண்டியதில்லை. இனியும் தொடர்ந்து நடிப்பதற்கு தேவையான சக்தியும், உடல்கட்டுக்கோப்பும் எனக்கு தேவை' என்றார்.

அன்றே அவரது தனி பயிற்சியாளராக சேர்ந்துவிட்டேன். இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். இத்தனை வயதிலும் அவர் பழைய உடல்வாகுடன், அதே எனர்ஜியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.." என்று கூறும் விபின் சேவியர், தொடக்ககாலத்தில் மம்மூட்டி உடற்பயிற்சியில் கொண்டிருந்த அக்கறை பற்றியும் விளக்குகிறார்.

"தொடக்க காலத்தில் தனது பயிற்சிக்கு தேவையான சிறிய கருவிகளை அவரே வடிவமைத்து வைத்திருந்தார். அவர் எந்த ஊருக்கு சென்றாலும் டிராவல் பேக்கில் டம்பள்ஸ் ஒன்றையும் எடுத்துச்செல்வார். இப்போது கேரவனில்கூட ஜிம் இருக்கிறது. ரெடிமேடு டம்பள்ஸ் இல்லாத அந்த காலத்திலே மம்மூட்டி தனக்காக அதனை வடிவமைத்து வைத்திருந்தது பெரிய விஷயம்.

அவருக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்துவிட்டால், அதற்குதக்கபடி தனது உடலில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குவது என்ற கோணத்தில் சிந்தித்து செயல்படுவார். நான் அவரது தேவையை உணர்ந்து செயல்படுவேன். ஞாயிற்றுகிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் சிலர் உடற்பயிற்சி மேற்கொள்ளமாட்டார்கள். மம்மூட்டி அந்த நாட்களிலும் தவறாமல் பயிற்சி செய்வார்.

காலையில் ஷூட்டிங் இருந்தால் ஆறரை மணிக்கு பயிற்சியை தொடங்கிவிடுவார். இல்லாவிட்டால் ஏழரை மணிக்கு ஆரம்பிப்பார். முதலில் ஒரு மணி நேர பயிற்சியை நிறைவு செய்வார். பின்பு 45 நிமிடம் கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்வார். ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வழியாக பயிற்சிகளை வழங்கினேன். நோன்பு காலத்திலும் அவர் பயிற்சி செய்ய தவறுவதில்லை. அன்றாடம் நோன்பு திறந்ததும் சிறிதளவு ஏதாவது சாப்பிட்டுவிட்டு பயிற்சிகளை மேற்கொள்வார். பின்பு உணவருந்துவார்.

ஓட்டல்களில் தங்கும்போது அங்குள்ள ஜிம்மை பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்வார். வெளிநாட்டு பயணங்களின்போது உடற்பயிற்சிக்கு தேவையான ஆடை மற்றும் ஷூக்களை வாங்குவார். அவருக்கு மட்டுமல்ல எனக்கும் வாங்கித்தருவார். ஒருமுறை விலை உயர்ந்த ஷூக்களை எனக்காக வாங்கிவந்தார். நான் அதை அன்போடு வாங்க மறுத்துவிட்டு, `எனக்கு நீங்கள் ஷூ தர விரும்பினால் நீங்கள் உபயோகித்ததை தாருங்கள்' என்று கேட்டேன். அவரும் தந்தார். அதை ஒரு பொக்கிஷம் போன்று பாதுகாத்து வருகிறேன்" என்கிறார், விபின் சேவியர்.

மேலும் செய்திகள்