ஒரே படத்தில் 40 நடிகர்-நடிகைகளை இயக்கிய அனுபவம் டைரக்டர் பேட்டி

சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘ராஜவம்சம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து இருக்கிறார்.

Update: 2021-02-25 22:10 GMT
இவர்களுடன் 40 முன்னணி நடிகர்-நடிகைகள் பங்கேற்று நடித்துள்ளனர். இத்தனை நடிகர்-நடிகை களை வைத்து, எந்த பிரச்சினையும் இல்லாமல், 49 நாட்களில் படப் பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறார், டைரக்டர் கே.பி.கதிர்வேல். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“வாழ்ந்தால், குலசேகரன் குடும்பத்தில் வாழ வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிற ஒரு கூட்டு குடும்பத்தை பற்றிய கதை இது. குலசேகரனாக விஜயகுமார், அவரது 11-வது மகனாக சசிகுமார் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். இதற்கு முன் குடும்ப பாசத்தை மையப்படுத்திய கதைகள் வந்திருக்கலாம். ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் கூட ஒரு குடும்ப கதைதான். ஆனால், அதில் அக்காள்-தங்கை சண்டை கருவாக இருந்தது.

‘ராஜவம்சம்’ கதையில் வரும் கூட்டு குடும்பத்தில் சண்டையே வராது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பொதுவாகவே ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகளை வைத்து படப் பிடிப்பை நடத்தும்போது, ‘ஈகோ’ பிரச்சினை வரும். என் படத்தில் அது வரவில்லை.

அதிகாலை ஆறரை மணிக்கே எல்லா நடிகர்-நடிகைகளையும் வரவழைத்து ஒரு ஹாலில் உட்கார வைத்து அன்று படமாக்கப் போகிற காட்சியை விளக்கி விடுவேன். ஒருவரை வைத்து படமாக்கும்போது மற்றவர்கள் கோபிக்க மாட்டார்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை என் குரு சுந்தர் சி.யிடம் கற்றுக் கொண்டேன்.

முன்னணி நடிகர்-நடிகைகளுக்காக 14 கேரவன்களை கொண்டு வந்தோம். ஒரு கேரவனை மூன்று நடிகர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். 30 கார்கள் பயன்படுத்தப்பட்டன. பொள்ளாச்சியில் 49 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டோம். தயாரிப்பாளர் டி.டி.ராஜாவுக்கு மகிழ்ச்சி.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘கடந்த பதினைந்து வருடங்களில் வெளிவந்த படங்களில், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இல்லாத படம் இதுதான்’ என்று கூறி, ‘யு’ சான்றிதழ் வழங்கினார்கள்”.

மேலும் செய்திகள்