இல்லத்தரசிகளுக்கு கை கொடுக்கும் சிறுதொழில்கள்

இல்லத்தரசிகள் தங்களிடம் இருக்கும் திறமையை வைத்தே சிறு தொழில்கள் தொடங்க முடியும்.

Update: 2021-11-29 05:30 GMT
குடும்பத்தை கவனித்துக்கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்காக காத்துக்கொண்டு இருப்பார்கள். இல்லத்தரசிகள் தங்களிடம் இருக்கும் திறமையை வைத்தே சிறு தொழில்கள் தொடங்க முடியும். இதற்கான சில வழிகள்:

ஆளுமை மேம்பாட்டு ஆலோசகர்:
சிலருக்கு தங்களின் தோற்றத்தை அழகாக வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதே சமயம், உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகள் அணியவோ, அலங்காரம் செய்யவோ தெரியாது. இவற்றில் நீங்கள் தேர்ந்தவர் என்றால் அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ஆலோசகராக மாறலாம்.

புகைப்படக் கலைஞர்:
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு ஆரம்பித்ததும், புகைப்படம் எடுக்கும் ஆர்வம் அனைவருக்கும் அதிகரித்துவிட்டது. சிலர் அழகான, புதுமையான விஷயங்களைப் பார்த்ததும் படம் பிடிப்பார்கள். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவிடுவதன் மூலம் உங்கள் திறமையை அனைவருக்கும் தெரிவிக்க முடியும். அதன் வழியாக பல வாய்ப்புகள் தேடி வருவதுடன், சிறந்த புகைப்படங்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானமும் கிடைக்கும்.


கைவினைப் பொருட்கள்:
பண்டிகை, விழா, திருமணம் போன்ற விசேஷங்களில், விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக புதுமையான கைவினைப் பொருட்களைத்தான் பலரும் நாடுகின்றனர். கைவினைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் இருந்தால், உங்களின் படைப்புகளை சரியான தளத்தில் வெளிப்படுத்தலாம். இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் உங்களின் திறமைக்குத் தீனி போடு
வதுடன், வருமானத்தையும் தரும்.

தனித்திறமைகளை வளர்த்தல்:
இன்றைய குழந்தைகள் பள்ளிப் படிப்புடன் பாட்டு, இசை, நாட்டியம், ஓவியம் போன்ற பிற தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்றவற்றில் நீங்கள் கை தேர்ந்தவராக இருந்தால், அவற்றை கற்றுக்கொடுப்பதைக்கூட தொழிலாகத் தேர்வு செய்யலாம்.

மசாலா பொடிகள்:
சமையல் வேலையை எளிதாக்குவதற்காக மசாலாப் பொடி வகைகள் பயன்படுத்துகிறோம். இவை தரமான வீட்டுத் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பம். உங்களுக்கு இவற்றைத் தயாரிக்கத் தெரியும் என்றால், அதையே தொழிலாகத் தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர் அதிகரிக்கும் போது, வேலையாட்களை வைத்துக்கூட இந்தத் தொழிலை மேற்கொள்ளலாம்.

வீட்டு அலங்காரம்:
பார்ப்பவர்களின் கண்ணைக் கவரும் வகையில் வீட்டை அழகுபடுத்துவது என்பது ரசனை மிகுந்த கலை. வீட்டை அழகுபடுத்தும் திறமை உங்களிடம் இருந்தால், ஆன்-லைன், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாடிக்கையாளருக்கான ஆலோசனைகளை வழங்கலாம். வீட்டின் அருகில் இருப்பவர்கள் என்றால் நேரில் சென்றும் ஆலோசனை கூறலாம். 

இது தற்போது பலருக்கும் கை கொடுக்கும் சிறந்த தொழிலாக மாறி வருகிறது. உங்களிடம் இருக்கும் திறமைகளை வீணடிக்காமல் தகுந்த முறையில் பயன்படுத்தினால், வருவாயும் பெருகும். வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் மாறலாம். 

மேலும் செய்திகள்