கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு: திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவு காரணமாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சியினர், பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-03-10 22:15 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், காக்கங்கரை கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பலர் காக்கங்கரை-தர்மபுரி சாலையில் கடைகள் நடத்தி வருகிறார்கள். பலர் திருப்பத்தூர்-தர்மபுரி நெடுஞ்சாலையில் கடைகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் நெடுஞ்சாலைத்துறை இடங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், கட்சி கொடிகள் இடையூறாக உள்ளதாகவும் கூறி அதே ஊரை சேர்ந்த சுரே‌‌ஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்து, மேற்படி கொடிகளை அகற்ற ஆணை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அறிந்த ஊர் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமே‌‌ஷ் (அ.தி.மு.க.)., டி.கே.ராஜா (பா.ம.க.) ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டர் சிவன்அருளிடம் மனு அளித்தனர்.

இதேபோல அரசியல் கட்சியினர் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். அதில், கட்சியின் கொடிக்கம்பம் யாருக்கும் இடையூறு இல்லாமல் உள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக அதனை அப்புறப்படுத்த வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்து கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு பெற்று உள்ளார். இது வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட வழக்கு. எனவே கடைகள், கொடிகள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத பட்சத்தில் அங்கேயே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சிவன்அருள் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடமும் நேரில் சென்று மனு அளித்தனர்.

அப்போது தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அரிகிரு‌‌ஷ்ணன், நகர செயலாளர் சேட்டு, தி.மு.க. ஊராட்சி செயலாளர் ராஜா, பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்