பீகார் சட்டசபை தேர்தல்; பிரதமர் மோடியின் உருவ ஒற்றுமை கொண்ட நபர் போட்டி

பிரதமர் மோடியின் உருவ ஒற்றுமை கொண்ட நபர் பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் மந்திரியாக முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.

Update: 2020-10-18 16:31 GMT
பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.  இதில், முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது.  இதற்கான பிரசார பணிகளில் தீவிரமுடன் இறங்கி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் உருவ ஒற்றுமையை கொண்ட நபர் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அபினானந்தர் பதக் (வயது 53) என்ற அந்த நபர் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் ஹத்துவா தொகுதியில் இருந்து வாஞ்சித் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.  பிரதமரை போன்ற முக அமைப்பு, ஆடை அணிவது மற்றும் பிரதமர் மோடியை போன்று பேசுவது ஆகியவற்றை பதக் மேற்கொண்டு பிரபலம் அடைந்துள்ளார்.  பல தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியை இழந்த பதக் இந்த முறை வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார்.

இதுபற்றி பதக் கூறும்பொழுது, இந்த தொகுதிக்கான தேர்தல் பணக்காரர் மற்றும் ஏழைக்கு இடையே நடைபெறும் போராக இருக்கும்.  இதற்காக நான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.  வளர்ச்சிக்கான போர் இது.  இந்த தேர்தலில் ஹத்துவா தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், மக்களின் கால்களை தொட்டு அவர்களின் ஆசியை பெற்று மாநில முதல் மந்திரியாக முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்