விமானத்தில் கடத்திய 1¾ கிலோ தங்கம் பறிமுதல்

பெங்களூருவில் வெவ்வேறு சம்பவங்களில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கிலோ 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Update: 2023-10-14 22:41 GMT

பெங்களூரு:-

945 கிராம் தங்கம் பறிமுதல்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு பயணியிடம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயணி தனது 'ஷு', பேண்ட் மற்றும் மடிக்கணினிகளில் மறைத்து வைத்து 945 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணி கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 945 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 பேர் மீது வழக்கு

இதுபோல், இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் ஒரு பயணியிடம் 103 கிராம் தங்கம் இருந்தது. இதையடுத்து, இலங்கை நாட்டை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 103 கிராம் தங்கமும் மீட்கப்பட்டது. இதுபோன்று, குவைத் நாட்டில் இருந்து வந்திறங்கிய விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியும் தங்கம் கடத்தி வந்திருந்தார். அவரையும் விமான நிலைய போலீசார் கைது செய்திருந்தார்கள்.

அவரிடம் இருந்து 689 கிராம் தங்கத்தை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தார்கள். ஒட்டு மொத்தமாக 3 சம்பவங்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 737 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இதுதொடர்பாக கைதான 3 பேர் மீதும் விமான நிலைய போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்