நடிகை ராகிணி திவேதியின் நண்பர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் மோசடி வழக்கில் ராகிணி திவேதியின் நண்பர் உள்பட ௨ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
பெங்களூரு:
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ராகிணி திவேதி போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கி, தற்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவிசங்கரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் மோசடி வழக்கில் தொடர்புடையதாக ரவிசங்கர், அவரது நண்பரான அஜய் ஆகியோரை மல்லேசுவரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதாவது மல்லேசுவரத்தை சேர்ந்த யோகேஷ் என்பவர் அஜயிடம் இருந்து ஒரு புதிய காரை வாங்கினார். அந்த காருக்கு காப்பீடு, வரி கட்ட வேண்டும் என்று கூறி யோகேசிடம் இருந்து ரூ.1.37 லட்சத்தை அஜய் வாங்கினார்.
ஆனால் காருக்கான வரி, காப்பீடு செலுத்தாமல், வரி செலுத்தியதாக கூறி, போலி ஆவணங்களை தயாரித்து யோகேசிடம் அஜய் கொடுத்திருந்தார். அதே நேரத்தில் வரி, காப்பீடு செலுத்தும்படி யோகேசுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீசு அனுப்பியது. இதுபற்றி மல்லேசுவரம் போலீசில் யோகேஷ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, தான் யோகேசிடம் வாங்கிய பணத்திற்காக அஜய், ரவிசங்கர் சேர்ந்து வரி, காப்பீடு செலுத்தியது போன்ற போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. கைதான அஜய், ரவிசங்கரிடம் தொடாந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.