தொழிலாளி கொலையில் 2 கொள்ளையா்கள் சிக்கினர்
பெங்களூருவில் தொழிலாளி கொலையில் 2 கொள்ளையா்கள் சிக்கினர்.;
பெங்களூரு:
பெங்களூரு புலிகேசிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் பீகாஷ் மோடி, தொழிலாளி. இவர், மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை செய்தார். பீகாஷ் வேலைக்கு சென்றபோது, அவரை தாக்கி மர்மநபர்கள் செல்போனை கொள்ளையடித்து சென்றிருந்தனர். மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பீகாஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதுகுறித்து புலிகேசிநகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், பீகாசை கொலை செய்ததாக கொள்ளையா்களான மஜர் மற்றும் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம் வாங்க பணம் இல்லாததால் பீகாசை கொலை செய்து, அவரிடம் 2 பேரும் செல்போனை கொள்ளையடித்தது தெரிந்தது. கைதான 2 பேர் மீதும் புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.