விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு பெண் அதிகாரி கைது

விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-06-04 21:24 IST

துமகூரு:

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பேகூரு கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருபவர் சவுமியா. அதே கிராமத்தைச் சேந்தவர் வினோத் கவுடா. விவசாயியான இவருக்கு மத்திய அரசு சார்பில் வருடந்தோறும் ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதேபோல் மாநில அரசும் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் இவரது வங்கி கணக்கில் உதவி தொகையாக செலுத்துகிறது.

இந்த நிலையில் இவர் அந்த வங்கி கணக்கை மாற்றுவது தொடர்பாக கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையிட்டார். மேலும் விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வட்டார வளர்ச்சி அதிகாரி சவுமியா, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக வங்கி கணக்கை மாற்றி விடுவதாக கூறினார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வினோத் இதுபற்றி மாவட்ட ஊழல் தடுப்பு படையில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதை அதிகாரி சவுமியாவிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்படி சவுமியாவிடம் லஞ்சப்பணத்தை வினோத் கொடுத்தார். சவுமியாவும் அதை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு படையினர் அதிகாரி சவுமியாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்