பங்காருபேட்டையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் தீவிர ரோந்து

பங்காருபேட்டையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.

Update: 2023-10-14 18:45 GMT

கோலார் தங்கவயல்

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை மற்றும் ஆண்டர்சன்பேட்டை சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து போலீசார் உத்தரவிட்டனர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ராபர்ட்சன்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் ஆண்டர்சன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி 2 நாட்கள் பொதுமக்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தவில்லை.

இதனால் போலீசார் அவர்களை கண்காணிப்பதை நிறுத்தினர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்துவிட்டது. நேற்று முன்தினம் காலை போலீசார் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வந்தது.

இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் ராபர்ட்சன்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நவீன், ஆண்டர்சன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் நிறுத்தி இருந்த வாகன உரிமையாளர்களை மடக்கி பிடித்த போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் அபராதமும் வசூல் செய்தனர்.

மேலும் இனி யாரேனும் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்