சிறுமி கற்பழிப்பு வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: ஹாவேரி கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஹாவேரி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.;
பெங்களூரு:
சிறுமி கற்பழிப்பு
ஹாவேரி மாவட்டம் கலகேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தொழிலாளிக்கு ஒரு மகள் இருக்கிறாள். அந்த சிறுமியை கடந்த சில ஆண்டுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் கற்பழித்து இருந்தார். இதுதொடர்பாக கலகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சிறுமியை கற்பழித்ததாக, ராணி பென்னூரை சேர்ந்த அனுமந்தகவுடா சிவலிங்ககவுடாவை கைது செய்திருந்தார்கள்.
சிறுமியின் வீட்டின் அருகே அனுமந்தகவுடா வசித்து வந்ததும், வீட்டின்அருகே விளையாடிய சிறுமியை கடத்தி சென்று கற்பழித்திருந்ததும் தெரியவந்தது.
தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹாவேரி மாவட்ட கோர்ட்டில் நீதிபதி நிங்கவுடா பட்டீல் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அனுமந்தகவுடாவுக்கு எதிராக கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தார்கள். வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி நிங்கவுடா பட்டீல் தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை, அனுமந்தகவுடா கடத்தி சென்று கற்பழித்திருப்பது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது.
அதனால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசும் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று நீதிபதி நிங்கவுடா பட்டீல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.