மைசூரு தசரா யானைகளின் கஜபயணம் வருகிற 7-ந்தேதி தொடக்கம்-முதல்கட்டமாக 8 யானைகள் வருகின்றன
மைசூரு தசரா யானைகளின் கஜபயணம் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக 8 யானைகள் வருகின்றன.;
மைசூரு
மைசூரு தசரா விழா
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் மைசூருவில் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் நிறைவுநாளில் அலங்கார வண்டிகள் அணிவகுப்புடன் ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் நடக்கும். இதில் ஒரு யானை, காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து செல்லும்.
மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லும். இது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை காண வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மைசூருவுக்கு வருவார்கள்.
15 யானைகள் தேர்வு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மைசூரு தசரா விழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை வெகு விமரிசையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. வழக்கமாக தசரா விழாவில் 10 யானைகள் தான் பங்கேற்கும்.
இந்த ஆண்டு 15 யானைகளை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அபிமன்யு என்ற யானை 750 கிேலா தங்க அம்பாரியை சுமக்க உள்ளது.
யானைகள் கஜபயணம்
இந்த நிலையில் மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மைசூருவுக்கு வரவழைக்கப்பட்டு அதற்கு நடைபயிற்சி, பட்டாசு சத்தத்தை கேட்டு மிரளாமல் இருக்க பீரங்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு சத்தான உணவும் கொடுக்கப்படும். இந்த நிலையில், தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளின் கஜபயணம் வருகிற 7-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக உன்சூர் தாலுகா நாகரஒலே வனப்பகுதியில் உள்ள வீரனஒசஹள்ளியில் இருந்து தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 8 யானைகள் வருகின்றன. அன்றைய தினம் காலை 9 மணி முதல் காலை 9.35 மணிக்குள் கன்னியா லக்கனத்தில் அனைத்து யானைகளும் மேளதாளங்களுடன் புறப்பட்டு லாரிகளில் மைசூருவுக்கு வருகின்றன. யானைகளை மந்திரி எஸ்.டி.ேசாமசேகர், கலெக்டர் பகாதி கவுதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. உள்பட பலர் மலர் தூவி வழியனுப்பு வைக்கிறார்கள்.
வருகிற 10-ந்தேதி...
அந்த யானைகள், மைசூரு அசோகபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்படுகிறது. பின்னர் வருகிற 10-ந்தேதி காலை 9.20 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் சுபமுகூர்த்த நேரத்தில் அசோகபுரத்தில் இருந்து தசரா யானைகள் மைசூரு அரண்மனைக்கு மேளதாளங்கள், மங்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்படுகின்றன.
அரண்மனைக்கு வரும் யானைகளுக்கு அரண்மனை அர்ச்சகர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் பூசாரி ஆகியோர் பூஜை செய்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிப்பார்கள். பின்னர் யானைகள் மைசூரு அரண்மனையில் தங்க வைக்கப்பட உள்ளன. 2-வது கட்டமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்து 7 யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட உள்ளன. அந்த யானைகள் அழைத்து வரப்படும் தேதி, விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.