ராஜண்ணாவின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை; கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி

தேவேகவுடா குறித்த ராஜண்ணாவின் கருத்துக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-03 20:27 IST

பெங்களூரு:

சிறப்பு பூஜை

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிருங்கேரி சாரதா மடத்தின் மடாதிபதி கலந்துகொண்டு டி.கே.சிவக்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆசி வழங்கினார். இதையடுத்து டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் தேவேகவுடா குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜண்ணா கூறிய கருத்துக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவருடைய சொந்த கருத்து. மனப்பூர்வமாக அவர் கூறியிருக்கமாட்டார். இருப்பினும் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்கும்படி அவரிடம் கூறியுள்ளேன். அவரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இனி இந்த விவகாரம் குறித்து பேச வேண்டியதில்லை.

கருத்து வேறுபாடு இல்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்காது என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல், மேல்-சபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. கடந்த தேர்தலில் மைசூரு, மண்டியா, துமகூருவில் சில இடங்களில் தோல்வி அடைந்தோம். இந்த முறை அந்த இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவோம். இதுதொடர்பாக அந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.

எனக்கு பதவி மீது ஆசை கிடையாது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கூட எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதற்காக நான் கவலைப்படவும் இல்லை. சித்தராமையாவுக்கு எதிராக பேசவும் இல்லை. சோனியா காந்தி கூறிய பின்னர் எனக்கு மந்திரி பதவி கிடைத்தது. எனக்கும் சித்தராமையாவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. நாங்கள் ஒற்றுமையுடன் பணியாற்றி வருகிறோம்.

எனக்கு தெரியாது

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சித்தராமையாவின் பெயரை நானும், பரமேஸ்வரும் தான் பரிந்துரை செய்தோம். சித்தராமையாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். கட்சியும் அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று கூறி உள்ளது. அவரது பிறந்தநாளை கொண்டாடுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அவரது பிறந்தநாளில் கலந்துகொள்ளும்படி எனக்கும் கட்சி மேலிடம் கூறியுள்ளது. நானும் அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வேன். சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவில் ராகுல்காந்தி கலந்துகொள்வது பற்றி எனக்கு தெரியாது. பரமேஸ்வருக்கும் இதுபோன்று பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். இது ஆதரவாளர்களின் விருப்பம். இதற்கு நாம் தடை போட முடியாது.

தனிப்பெரும்பான்மையுடன்...

ஆசிரியர், பட்டதாரி தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு வாக்களித்தது கிராமப்புற வாக்காளர்கள் இல்லை. படித்த ஆசிரியர்கள் தான் வாக்களித்தனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தினோம். இதில், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று முடிவு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்