கல்லறை தோட்டத்தில் புதர் செடிகள் அகற்றம்

சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதர் செடிகள் அகற்றப்பட்டது.

Update: 2023-10-26 18:45 GMT

சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதர் செடிகள் அகற்றப்பட்டது.

கல்லறை திருநாள்

கோலார் தங்கவயலில் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படும். இந்த நாளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

இதில் இந்து, கிறிஸ்தவர்கள் வேறுபாடு இன்றி இந்த கல்லறை திருநாளை அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கல்லறை திருநாள் வருகிற 2-ந் தேதி நடக்கிறது. இந்தநிைலயில் கல்லறைகளை தூய்மை செய்யும் பணிகளில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் ஈடுபட முயற்சித்தனர்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு புதர் செடிகள் வளர்ந்து இருந்ததுடன், குப்பைகள் பரவி கிடந்தன. ஆண்டுதோறும் நகரசபை நிர்வாகம் சார்பில் கல்லறை தோட்டங்களில் உள்ள குப்பை கழிவுகள், புதர் செடிகள் அகற்றி கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கல்லறை தோட்டங்களை தூய்மை செய்ய யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

நகரசபைக்கு கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கவுன்சிலர் மற்றும் நகரசபை கமிஷனருக்கு தகவல் அளித்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லறை தோட்டங்களின் வெளியே இருந்த குப்பை கழிவுகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு சென்றனர். ஆனால் கல்லறை தோட்டத்தின் உள்ளே இருந்த புதர்கள் மற்றும் குப்பை கழிவுகள் அகற்றப்படவில்லை.

குறிப்பாக சாம்பியன் ரீப் மற்றும் மாரிக்குப்பம் அக்காள், தங்கை கல்லறை தோட்டங்களில் அமைந்துள்ள பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் சாம்பியன் ரீப் கல்லறை தோட்டம் அமைந்துள்ள பகுதியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் மோனிஷா ரமேஷ் மற்றும் மாரிகுப்பம் அக்காள், தங்கை கல்லறை தோட்டம் அமைந்துள்ள பகுதியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் சந்திரன் ஆகியோரிடம் மக்கள் முறையிட்டனர்.

அவர்கள் உடனே நகரசபை கமிஷனர் பவன் குமாரை சந்தித்து கல்லறை தோட்டங்களில் மண்டி கிடக்கும் புதர்கள், குப்பை, கழிவுகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று நகரசபை கமிஷனர் பவன்குமார் சாம்பியன் ரீப் மற்றும் மாரிக்குப்பம் அக்காள், தங்கை கல்லறை பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். பின்னர் நகரசபை தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்கள் உடனே கல்லறை தோட்டங்களை தூய்மை செய்து கொடுக்கும்படி கூறினார்.

குப்பை கழிவுகள் அகற்றம்

அதன்படி தூய்மை பணியாளர்கள் மூலம் நேற்று சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள கல்லறை தோட்டங்களில் மண்டி கிடந்த புதர் செடிகள், குப்பை கழிவுகளை அகற்றப்பட்டது.

இந்த பணியில் 50-க்கும் அதிகமான நகரசபை தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த சாம்பியன் ரீப் பகுதியில் இந்து, கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டம் உள்ளது. அனைவரும் கல்லறை திருநாள் அனுசரிப்பதால், பாகுபாடின்றி தூய்மை செய்து கொடுக்கப்பட்டது.

அதேபோல கல்லறை திருநாள் நடைபெறும் நேரங்களில் மின் விளக்குகள் அலங்காரம் மற்றும் குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் நகரசபை கமிஷனருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கேட்ட நகரசபை கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்