பெங்களூரு விஞ்ஞானியிடம் ரூ.7 லட்சம் மோசடி அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி பெங்களூரு விஞ்ஞானியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-08-30 17:16 GMT

சிவமொக்கா:

வீட்டுமனை வாங்கி தருவதாக...

பெங்களூருவை சேர்ந்தவர் டாக்டர் சதுர்முகா. இவர், மத்திய அரசின் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். விஞ்ஞானி சதுர்முகாவின் தந்தை, சிவமொக்கா நகரில் வசித்து வருகிறார். இவருக்கு, பத்ராவதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ரவி என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி, அவரிடம் தனது உறவினர் வினியாஷ் பட்டேல் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவதாகவும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிவமொக்கா நகரின் மையப்பகுதியில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை உண்மையென நம்பிய அவர், மகன் சதுர்முகாவிடம் தெரிவித்தார். இதையடுத்து சதுர்முகா, ரவி மற்றும் அவரது உறவினர் வினியாஷ் பட்டேலிடம் வீட்டுமனை வாங்க ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார்.

ரூ.7 லட்சம் மோசடி

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் 2 பேரும், சதுர்முகாவுக்கு வீட்டு மனை பெற்று கொடுக்கவில்லை. இதனால் சதுர்முகா, வாங்கிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டனர். அப்போது தான் சதுர்முகாவுக்கு, அவர்கள் 2 பேரும் வீட்டு மனை தருவதாக கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர், வினோபா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பண மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் அவர்களை கைது செய்ய வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்