பெங்களூரு சுற்றுவட்ட சாலை திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

பெங்களூரு சுற்றுவட்ட சாலை திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.;

Update:2022-06-20 21:33 IST

பெங்களூரு:

கனவு திட்டம்

பெங்களூரு கொம்மகட்டாவில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பிரதமர் மோடி நேற்று ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக ரூ.15 ஆயிரம் கோடியில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது பெங்களூரு மக்களின் நீண்ட நாள் கனவு திட்டம் ஆகும். எலகங்கா முதல் ஐதராபாத் வரை இரட்டை ரெயில் பாதை, அரிசிகெரே-துமகூரு இடையே ரெயில் பாதை மின்மயம், பன்முக சரக்கு பூங்கா துமகூரு அருகே அமைகிறது.

செயற்கைகோள் நகரங்கள்

பெங்களூரு சுற்றுவட்ட சாலை திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் 4 செயற்கைகோள் நகரங்களுக்கு நல்ல இணைப்பு வசதி கிடைக்கும். இந்த அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது.

வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வலுவான நாடாக மாறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதனை மனதில் வைத்தே அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மனித வளத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தூய்மை பாரதம், ஆயுஸ்மான், கிசான் சம்மான், பிரதமர் அவாஸ் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்