திரையுலகில் முன்னணி நடிகைக்கு ஏற்பட்ட சில மோசமான அனுபவங்கள்...

திரையுலகில் தனக்கு நடந்த சில மோசமான அனுபவங்கள் பற்றி முன்னணி நடிகை வித்யா பாலன் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Update: 2022-03-20 04:28 GMT

மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யாபாலன். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்தார். மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இந்தியில் வித்யாபாலனை மனதில் வைத்தே கதைகளை உருவாக்குகிறார்கள். ஆனாலும் இதுவரை சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் படங்களில் வாய்ப்பு தேடியதாகவும், கதாநாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்று ஒதுக்கியதால் இந்திக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

தனது சினிமா வாழ்க்கை பற்றி வித்யாபாலன் கூறும்போது, முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடிக்க வைக்காமல் தன்னை ஒதுக்கியதாக குறை சொல்லி இருக்கிறார்.

ஒதுக்கிய கதாநாயகர்கள்

நான் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடிக்கவில்லை. அவர்கள் என்னை ஓரம் கட்டுவதாகவும், நிராகரிப்பதாகவும் உணர்ந்தேன். அவர்கள் ஒதுக்கியதற்காக எனக்கு வருத்தம் இல்லை. நல்ல கதைகள்தான் சினிமாவுக்கு ஆன்மாவை போன்று இருக்கின்றன. எனவே அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். அந்த படங்கள் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன. ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என கூறினார்.

13 படங்களில் இருந்து நீக்கம்

திரையுலகில் தனக்கு நடந்த சில மோசமான அனுபவங்களை பற்றியும் அவர் பிரபாத் கபர் என்ற இந்தி நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த புதிய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.  நான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது.  13 படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.

அதில் ஒரு படத்தில் நடிப்பதில் இருந்து தயாரிப்பாளர் என்னை நீக்கி விட்டு, என்னிடம் நடந்து கொண்ட விதம் மறக்க முடியாதது.  அவர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். நான் மிகவும் அசிங்கமாக இருப்பது போன்று உணர வைத்தனர். 

கண்ணாடியில் பார்க்க பயம்

அதனால் கண்ணாடியில் என்னை பார்ப்பதற்கான தைரியம் வர எனக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டது என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.  அன்று என்னை வேண்டாம் என கூறியவர்களிடம் (தயாரிப்பாளர்கள்) இருந்து சமீபத்தில் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

எங்களுடைய படத்தில் நடிக்க வாருங்கள்.  வாய்ப்பு தருகிறோம் என கூறினர்.  ஆனால், பணிவாக அவர்களது படங்களில் நடிக்காமல் மறுத்து விட்டேன் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

பாலசந்தர் படம்

தொடர்ந்து அவர் கூறும்போது, 2004ம் ஆண்டு காலகட்டத்தில், திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தரின் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.  அப்போது, வேறு பல படங்களில் இருந்து நான் மாற்றப்பட்ட சமயம்.  எனக்கு பதிலாக வேறு சிலர் நடிக்க வைக்கப்பட்டனர்.  இதில் பாலசந்தர் படத்திற்காக,
நியூசிலாந்து நாட்டுக்கு படப்பிடிப்புக்காக செல்ல இருந்த நிலையில், படத்தில் இருந்து என்னை நீக்கிய விசயம் பின்னரே தெரிய வந்தது.

என்னிடம் அதுபற்றி எதுவும் கூறவில்லை.  எனது தாயார் போன் செய்து விவரம் தெரிந்து எனக்கு கூறினார்.  ஆத்திரத்தில் மரைன் டிரைவில் இருந்து பந்திரா பகுதி வரை அந்த நாளில் நடந்தே சென்றேன்.  அனலால் கொதித்திருந்த அந்த தருணத்திலும் மணிக்கணக்கில் வெயிலில் நடந்து சென்றேன்.  நிறைய அழுதேன்.  அந்த நினைவுகள் இன்றும் என்னை விட்டு நீங்காமல் உள்ளன.  ஆனால், 3 ஆண்டுகள் திரை துறையில் போராடியும் எந்த முன்னேற்றமுமில்லை என வேதனையுடன் கூறுகிறார்.

எனினும், இந்தி திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக அவர் உயர்ந்து உள்ளார்.  அவர் அடுத்து ஷெபாலி ஷா, மானவ் கவுல் உள்ளிட்டோருடன் இணைந்து ஜல்சா என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் கடந்த 18ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்