நீதிபதியின் கருத்து ஜெயலலிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது வைகோ பேட்டி

மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. அப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்து இருக்க கூடாது.

Update: 2017-01-01 08:35 GMT

சென்னை,

நீதிபதியின் கருத்து ஜெயலலிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூறிஉள்ளார். 

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கட்சி தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:- ம.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி 26-ந் தேதி நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். அது பற்றி இனி எதுவும் சொல்வதற்கு இல்லை. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. எனவே அந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்போம். ம.தி.மு.க மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும்.

மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. அப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்து இருக்க கூடாது. இது அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர்ஒரு பெண்மணி. அதிலும் அரசியல் அரங்கில் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம். 

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுத்தது நான். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த மனுவில் கையெழுத்திட்டார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாக அறிகிறேன். அது மகிழ்ச்சி அளிக்கிறது. கறுப்பு பண விவகாரத்தில் மோடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனால் மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டு இருப்பதை பிரதமரும் ஒப்புக்கொண்டுள்ளார். நானும் கூறியிருக்கிறேன். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இது வேதனை அளிக்கிறது பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் தலா ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்