நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்

தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.

Update: 2017-08-14 00:30 GMT
சென்னை,

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.

இருந்த போதிலும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. ‘நீட்’ தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

என்றாலும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா, இன்று (திங்கட்கிழமை) மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் உத்தரவை கவர்னர் வித்யாசாகர் ராவ் பிறப்பிப்பார்.

அப்படி உத்தரவு கிடைத்ததும், இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும்.

மேலும் செய்திகள்