எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.;

Update:2017-09-14 13:50 IST
எடப்பாடி  அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில்  டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு
சென்னை,

முதல்-அமைச்சர் பதவி யில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரன் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அவருக்கு வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22-ந்தேதி அந்த 19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதில் அவர்கள், “முதல்- அமைச்சர்   எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவரை மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் டி.டி.வி. தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமி பக்கம் 113 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாண்மைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுவதால் எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி  சட்ட சபையில்  தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்