தேர்வில் காப்பியடித்து சிக்கியதால் அவமானம்: பல்கலைக்கழக விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

செம்மஞ்சேரியில் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-22 22:00 GMT
சோழிங்கநல்லூர்,

செம்மஞ்சேரியில் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோந்தவர் துரவராஜரெட்டி. இவருடைய மகள் துருவராகமவுலிகா (வயது 18). இவர் செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கம்ப்்யூட்டர் என்ஜினீயரிங் படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை வழக்கம் போல் துருவராகமவுலிகா தேர்வு எழுதினார். அந்த மாணவி தேர்வில் காப்பி அடித்ததாக கூறி பல்கலைக்கழக நிர்வாகத்தால் தேர்வு நடைபெறும் அறையில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றியதால் மனமுடைந்த அவர் நேராக விடுதிக்கு சென்றார். அதே பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்கும் தன்னுடைய சகோதரர் ராக்கேஷ்ரெட்டிக்கு செல்போனில்் தற்கொலை முடிவு குறித்து குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்போன் அனுமதியில்லாததால் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்த சகோதரர் குறுந்தகவலை பார்த்தவுடன் அதிர்்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் அழுது கொண்டு சகோதரி தங்கியுள்ள விடுதி அறைக்கு ஓடினார். மாணவி தங்கியிருந்த அறை தாழிடப்பட்டிருந்ததை கண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் நிர்வாகத்தினர் இது குறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே மாணவி அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மையில் மாணவி தேர்வில் காப்பியடித்து தேர்வு கண்காணிப்பு அலுவலர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து அப்போது தேர்வு அறையிலிருந்த மாணவர்களிடமும், போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மாணவி இறந்த தகவல் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் விடுதியில் கண்ணாடி, ஜன்னல்கள் மற்றும் பொருட் களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த படுக்கைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர்.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதுகாப்புக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்