பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேச்சு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவர் கைது

பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் பரவிய தகவலை தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-23 23:00 GMT
கோவை, 

சேலத்தை சேர்ந்த பிரகாஷ் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையம் சென்றார். அப்போது அந்த நபர், கோவையை சேர்ந்த ரபீக்கிடம் (வயது 50) நீங்கள் ரூ.4 லட்சம் கொடுத்து கார்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து பிரகாஷ், ரபீக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் இருவரும் பேசிய 8 நிமிடங்கள் கொண்ட ஆடியோ, வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த உரையாடலில், ரபீக், நாங்கள் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு உள்ளோம் என பதிவாகி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததும், அவர்கள் அந்த ஆடியோவை பதிவிறக்கம் செய்து, உரையாடலை கேட்டனர். அப்போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆடியோவில் ரபீக் பேசி இருப்பது பற்றி போலீசார் கூறியதாவது:-

‘நாங்கள் தமிழகத்தில் உள்ள பல சிறைகளுக்கு சென்று வந்தவர்கள். யாருக்கும் பயப்படமாட்டோம். கார்களுக்கு கடன் கொடுப்பவர்களை நாங்கள் விடுவது இல்லை. அவர்களிடம் இருந்து பல கார்களை வாங்கி உடைத்து உள்ளோம்.

எங்களை பற்றி போலீசாருக்கு நன்றாக தெரியும். எந்த கொம்பனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே நாங்கள் அத்வானியை கொல்ல குண்டுவைத்தோம். தற்போது பிரதமர் மோடியையும் கொல்ல திட்டமிட்டு உள்ளோம். என் மீது 22 வழக்குகள் உள்ளன. 160 கார்களை உடைத்துள்ளோம். ஆனால் எங்களை யாரும் கைது செய்யவில்லை.

இவ்வாறு ரபீக் பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ரபீக் மீது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று இரவு அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ரபீக் ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 2007-ம் ஆண்டில் விடுதலையானார். அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் 2014-ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அவர் உண்மையிலேயே பிரதமரை கொல்ல திட்டமிட்டு உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். 

மேலும் செய்திகள்