இறப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

இறப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-06-09 20:17 GMT
சென்னை,

கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு 3 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகத்தலைவர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடந்தது.

இந்த பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் 8-வது மாடியில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, அவர்களது உறவினர்கள் வார்டுக்குள் சென்று பார்க்கும் நிலையை மாற்றி, நோயாளிகளின் நிலையை உறவினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்கள் கட்டுக்குள் வந்தது

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது சரிபாதியாக குறைந்துள்ளது.

அதேபோல் 42 ஆயிரம் எண்ணிக்கையில் படுக்கைகளும் காலியாக இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன. 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

கிராமப்புறங்களில் பொதுமக்கள் தடுப்பூசிக்கு மிகப்பெரிய வரவேற்பை தந்துள்ளனர். மிக விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் 1,052 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குற்றச்சாட்டு உண்மை அல்ல

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு, அவர் வேறு ஒரு காரணத்தினால் உயிரிழந்துள்ளார் என இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது எனவும், இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் உண்மை அது அல்ல.

பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும்போது தான் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். அதுவரை வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களது நுரையீரல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து 25 நாட்களுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது, அந்த நோயாளிக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்படுகிறது. ஆனால் நுரையீரல் பாதிப்பால் அவர் உயிரிழந்து விடுகிறார்.

அவர் இறந்தவுடன், டாக்டர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) வழிகாட்டுதல் படி, இறப்பு சான்றிதழ் அளிக்கின்றனர். இது முதல்-அமைச்சராக இருந்து, தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவருக்கு தெரியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

உணர்ந்து கொள்ள வேண்டும்

மேலும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அவர் உயிரிழக்கும்போது, அவருக்கு தொற்று இல்லை. இதனால் தான் அப்போதையை அரசு, அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்தது. இதேபோல்தான் எச்.வசந்தகுமாரின் இறப்பும் நிகழ்ந்தது.

எனவே எதிர்க்கட்சி தலைவர் வீணாக பழி சுமத்துவது, குற்றம் சுமத்துவதை நிறுத்தி, சட்ட ரீதியாக தங்களது ஆட்சியின்போது என்ன அணுகுமுறைகளை, நடைமுறைகளை மேற்கொண்டீர்களோ, அதே தான் இந்த அரசும் செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்