போதிய ஆவணங்கள் இன்றி தொடரப்படும் வழக்குகளால் கோர்ட்டின் நேரம் வீணாகிறது மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை

மனுக்களை அதிகாரிகள் பரிசீலிக்க உரிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், போதிய ஆவணங்கள் இன்றி தொடரப்படும் வழக்குகளால் கோர்ட்டின் நேரம் வீணாகிறது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.

Update: 2021-07-11 02:10 GMT
மதுரை, 

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா மாரனேரி பகுதியில் பட்டா வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி ஏராளமானவர்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பலர், தங்களின் கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு போதுமான ஆவணங்கள் இன்றி, ஐகோர்ட்டுக்கு வருகின்றனர். பெரும்பாலானோர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய ஒரு வாரத்திலேயே, தங்களது மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்று கூறி வழக்கு தொடர்கின்றனர். இந்த மனுக்களை தினமும் விசாரித்து எந்திரத்தனமாக உத்தரவிடும் நிலை தான் உள்ளது.

இந்த மனுக்களால் ஐகோர்ட்டின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டு, பல நல்ல வழக்குகள் முடிக்கப்படாமல் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 10 ஆண்டுக்கு மேலான வழக்குகள் கூட முடிக்கப்படாமல் உள்ளன. இது வேதனை தருகிற விஷயமாக உள்ளது.

அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு மற்றும் அந்த மனு அனுப்பியதற்கான ஒப்புகை சீட்டு ஆகியவற்றை மட்டும் ஆவணங்களாக தாக்கல் செய்கின்றனர். இந்த வழக்கை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட நிலத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வருவதால் மனுதாரர்கள் பட்டா உரிமை கேட்டுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் கோர்ட்டின் அதிகாரத்தை வீணாக்கக்கூடாது.

இந்த விவரங்களை வக்கீல்கள் சங்கங்களுக்கு தெரிவிக்க வேண்டும். கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பரிசீலிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் நீதிமன்றத்தை நாடக்கூடாது. இதுபோன்ற மனுக்களை ஊக்கப்படுத்த முடியாது. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்